

சபரிமலை மண்டல பூஜை சீசனில் 168.84 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கேரள மாநில தேவசம்போர்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை வழிபாடு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. இந்த வழிபாடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சீசனில் பல லட்சம் பக்தர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். கோயில் உண்டியல், பிரசாதம், நன்கொடைகள் என இந்த சீசனில் மொத்தம் 168. 84 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. மீண்டும் மகர ஜோதி வழிபாடு டிசம்பர் 30-ம் தேதி தொடங்கும். ஜனவரி 14-ம் தேதி வரை மகர ஜோதி வழிபாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
பம்பையில் இருந்து சபரிமலை வரை ரோப்கார் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இதற்கு வனத்துறையின் அனுமதி தேவை என்பதால் அதற்காக காத்திருக்கிறோம். மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு வசதிகள் செய்யப்படும்'' எனக் கூறினார்.