

புதுடெல்லி: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், கடந்த 1890-ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தின், 124ஏ பிரிவு அமலுக்கு வந்தது. தேச துரோக சட்டப் பிரிவு என்று கூறப்படும் இதன்கீழ், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும்.
இந்த தேச துரோக சட்டப்பிரிவு, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. இது பேச்சுரிமையை தடுக்கும் வகையிலும், அரசியலுக்காக தேச துரோக வழக்கு பதிவு செய்து இந்தச் சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தேச துரோக சட்டப்பிரிவின் கீழ் ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது, புதிதாக எந்த வழக்கும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள்ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாஆகியோர் ஆஜராயினர். மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.
கபில் சிபல் வாதம்: மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும் போது, ‘‘தேச துரோகசட்டப்பிரிவு பல்வேறு சூழ்நிலைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கொடூர சட்டப்பிரிவு. இதை ரத்து செய்ய வேண்டும்.
இந்தச் சட்டப்பிரிவின் தேவை குறித்து முடிவு செய்ய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
அப்போது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி வாதிடும் போது, ‘‘இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் 3 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. எனவே, தேச துரோகம் தொடர்பா இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதை தள்ளி வைக்க வேண்டும். இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.
அதை ஏற்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுத்து விட்டார். அத்துடன், தேச துரோக சட்டப்பிரிவு குறித்து 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.