Published : 29 Dec 2017 05:07 PM
Last Updated : 29 Dec 2017 05:07 PM

2016-17-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவு: அருண் ஜேட்லி ஒப்புதல்

2016 -17 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

‘‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும், ஜிடிபி என அழைக்கப்படும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2015 -2016 நிதியாண்டில் 8 சதவீதமாக இருந்தது. 2016 -17 நிதியாண்டில் இது, 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டான, 2017 - 2018ன் முதல் காலாண்டில், 5.7 சதவீதமும், இரண்டாவது காலாண்டில் 6.3 சதவீதமும் பொருளாதார வளர்ச்சி இருந்துள்ளது.

தொழில்துறை மற்றும் சேவைதுறையில் ஏற்பட்டுள்ள சரிவால் இந்த வளர்ச்சி குறைவு ஏற்பட்டுள்ளது. அந்த துறைகளில் நிலவிய கட்டமைப்பு, நிதி மற்றும் புறக்காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும் சர்வதேச நிதியம், 2016ம் ஆண்டில் உலக அளவில் மிகவேகமான பொருளதார வளர்ச்சி கண்ட நாடாகவும், 2017ம் ஆண்டில் உலக அளவில் இரண்டாவது பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாகவும், இந்தியாவை குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக உற்பத்தி, போக்குவரத்து, மின்சாரம், நகர்புறம் மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. நேரடி அன்னிய முதலீட்டு கொள்கையில் ஒருங்கிணைந்த சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெசவுத்துறைக்கு சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 -2018 பட்ஜெட்டில் சாலைகள் அமைப்பு, வீடுகட்டும் திட்டம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு துறைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதுபோலவே எளிதாக தொழில் தொடங்குதல், மின்னனு பொருளாதாரம் உள்ளிட்டற்றிக்கு, அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தொழில் மற்றும் வர்த்தகத்துறை வளர்ச்சியில் ஜிஎஸ்டி குறிப்பிடத்தக்க அம்சமாக திகழும்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x