Published : 19 Dec 2017 09:51 AM
Last Updated : 19 Dec 2017 09:51 AM

வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதால்தான் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம், ‘‘ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சந்தேகப்பட்டோம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. பாஜக வெற்றி பெற்றதற்கு அதுதான் காரணம். இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சறுத்தல்’’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பட்டிதார் சமூகத் தலைவரான ஹர்திக் படேலும், ‘‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஏடிஎம் இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏன் செய்ய முடியாது?’’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி கூறுகையில், ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய முடியாது. இது தொடர்பாக ஏற்கெனவே சந்தேகங்கள் எழுப்பப்பட்டபோது ஊடகங்கள் மூலம் நாங்கள் விரிவான விளக்கம் அளித்துள்ளோம். குஜராத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவு இயந்திரத்துடன், ‘விவிபாட்’ இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் மூலம் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ள முடியும். எனவே, இதுகுறித்து பிரச்சினை எழுப்புவது சரியல்ல. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்த வகையிலும் முறைகேடு செய்ய முடியாது என்று நான் உறுதியளிக்கிறேன்’’ என்றார்.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜூன் மோத்வாடியா, ‘‘குஜராத் முதல்கட்ட தேர்தலின்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘ப்ளூடூத்’ மூலம் 3 செல்போன்களுடன் இணைக்கப்பட்டிருந்தன’’ என்று தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, ‘‘ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ தேர்தலில் தோற்றுப்போகும் போது இதுபோன்று குற்றச்சாட்டுக்களை கூறுவார்கள். இது நியாயமற்றது’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x