Published : 13 Sep 2023 06:58 AM
Last Updated : 13 Sep 2023 06:58 AM

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது விவகாரம்: வீட்டுக்காவல் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

சிறையில் சந்திரபாபு நாயுடு

விஜயவாடா: பாதுகாப்பு கருதி வீட்டுக் காவலில் வைக்க கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் போடப்பட்ட மனுவை விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இந்தார். அவரது பதவிக் காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை மாநில சிஐடி போலீஸார் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் கைது செய்தனர்.

விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவரைமறுநாள் விஜயவாடா லஞ்சஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதில் சந்திரபாபுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜமகேந்திர வரம் மத்திய சிறையில் சந்திரபாபு அடைக்கப்பட்டார். அவருக்கு 7691 எனும் கைதி எண் வழங்கப்பட்டது. அவருக்கு வீட்டு உணவு, மருந்து, மாத்திரைகள், நாளிதழ்கள் வழங்கப்படுகிறது. ஏசி அறை, டி.வி. உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் 10 பேர் மாரடைப்பு மற்றும் தற்கொலை காரணமாக உயிரிழந்தனர்.

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் பாது காப்பு கருதி அதுவரை அவரை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் எனவும் அவரது வழக்கறிஞர் சித் தார்தா லூத்ரா சார்பில் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், வீட்டுக்காவலில் சந்திரபாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு இருக்காது. சிறையில் தான் அவருக்கு அதிக பாதுகாப்பு உள்ளது என கூறி, வீட்டுக்காவல் மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. மேலும், சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு குறித்து இன்று புதன்கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கணவரின் உயிருக்கு ஆபத்து: சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிரம்மனி ஆகியோர் நேற்று மாலை சிறைக்கு சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தனர். பின்னர் சிறைக்கு வெளியே புவனேஸ்வரி செய்தியாளர்களிடம் பேசும்போது, “எனது கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது போல் எனக்கு தோன்றுகிறது. சிறையில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. நான் விரைவில் வெளியில் வருவேன். மக்களைசந்திப்பேன், நியாயம் கேட்பேன், மக்களுக்காக மீண்டும் சேவை செய்வேன் என்று எனது கணவர் கூறினார்.உடல் நலத்துடன் இருப்பதாவும் அவர் கூறினார். மக்கள் எப்போதும் அவரது பக்கம் நிற்க வேண்டும்.

எனது கணவர் அனுமதியுடன் கட்டிய புதிய சிறைச்சாலையில் அவரே உள்ளதை பார்க்கும் போதுஎன் மனம் கனக்கிறது. என் நினைவுமுழுவதும் அவர் மீதே உள்ளது. இதுபோன்ற நிலைமை வரும் என கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x