Published : 12 Sep 2023 04:56 AM
Last Updated : 12 Sep 2023 04:56 AM
விஜயவாடா: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திராவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி போலீஸார் கைது செய்தனர். அவரை வரும் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த10-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, சிறையில் அவருக்கு ஏசி படுக்கை வசதி, தனி கழிப்பறை, நாளிதழ்கள், தொலைக்காட்சி, வீட்டு சாப்பாடு, தனி உதவியாளர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக ஜெகன்மோகன் அரசு வீண் பழி சுமத்தி, பொய் வழக்குகளில் அவரை கைது செய்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஜெகன்மோகன் அரசை கண்டித்தும் சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நேற்று ஒரு நாள் முழு அடைப்புக்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்தது. இதற்கு ஜனசேனா, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: இதைத் தொடர்ந்து, ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம்போல இயங்கின. பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற தெலுங்கு தேசம் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். பலர் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மம்தா பானர்ஜி கண்டனம்: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘ஒருவேளை குற்றம் நடந்திருந்தால்கூட, விசாரணை நடத்தி, சட்டப்படி நோட்டீஸ் வழங்கி, முறைப்படி கைது செய்திருக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்’’ என்று அவர் கூறினார்.
பாஜக எம்.பி. லட்சுமண் கூறும்போது,‘‘இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை ஒரு தீவிரவாதிபோல கைது செய்தது மிகவும் தவறு’’ என்று தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், ஆந்திர சுற்றுலா துறை அமைச்சர் ரோஜா, நகரியில் தனது ஆதரவாளர்களுடன் பட்டாசு வெடித்தும்,இனிப்பு வழங்கியும் கொண்டாடினார். இதுபோல பல இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
ஜெகன்மோகன் மீது குற்றச்சாட்டு: சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளருமான லோகேஷ், ராஜமகேந்திரவரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த வழக்கில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஊழல் நடந்ததாக கூறும் பணம் எங்கு போனது, யாருக்கு யார் வழங்கியது என்பதை எங்கும் சிஐடி கூறவில்லை. குஜராத் உட்பட 7 மாநிலங்களில் திறன்மேம்பாட்டு கழகம் செயல்படுகிறது. ஆந்திராவில் இது சந்திரபாபு நாயுடு ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2.13 லட்சம் பேருக்கு பயிற்சி அளித்தோம். ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெகன்மோகன் மீது 38 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் ரூ.42 லட்சம் கோடி சொத்துக் குவிப்பு, நிதி முறைகேடு ஆகிய வழக்குகளில் கைதாகி, சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வந்தவர். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணையை அவர் எதிர்கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT