Published : 12 Sep 2023 05:09 AM
Last Updated : 12 Sep 2023 05:09 AM

இந்தியா, பாரத் என்ற இரண்டும் ஒன்றுதான்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆதரவு

ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்தியா, பாரத் என்ற இரண்டு சொற்களிலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெளிநாட்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அங்கு கூடியிருந்த வெளிநாட்டு மற்றும் இந்திய மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து பேசினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:

இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா, பாரத் ஆகிய 2 சொற்களுமே உள்ளன. அதனால் எங்களுக்கு அந்த இரண்டு சொற்களின் பயன்பாட்டிலுமே எந்தப் பிரச்சினையும் இல்லை. இரண்டுமே ஏற்கக் கூடியவைதான். ஆனால் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இண்டியா என்று பெயர் சூட்டப்பட்டதால் பாஜகவுக்கு இந்தியா என்ற பெயர் எரிச்சலை ஊட்டி வருகிறது. அதனால்தான் அவர்கள் பெயரை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் ஆன்மாவை சிதைக்க நினைப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்.

சிறுபான்மையினரின் பங்களிப்பை முடக்க பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை முயற்சிக்கின்றன. சிறுபான்மையினர் என்பதாலேயே அவமதிக்கப்படுவார்கள் என்றால் எனக்கு அத்தகைய இந்தியா வேண்டாம். சொந்த தேசத்திலேயே சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்கள் அசவுகரியமாக உணர்வார்கள் என்றால் அது இந்தியாவுக்கு அவமானம்.

சீக்கியர்களும், பெண்களும் இன்னும் பிற சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய 20 கோடி மக்கள் அசவுகரியமாக உணர்வார்கள் என்றால் அது நம் அனைவருக்கும் அவமானம்தானே. அது சரி செய்யப்பட வேண்டும் அல்லவா? இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

மேலும் அவர் கூறும்போது, “பாஜகவின் கொள்கையில் இந்து மதக் கொள்கை என்று ஏதும் இல்லை. நானும் பகவத் கீதையைப் படித்துள்ளேன். உபநிடதங்களும் கற்றுள்ளேன். எந்த ஒரு இந்து மத நூலிலும் தன்னைவிட வறியவரை துன்புறுத்தச் சொல்லப்பட வில்லை. பாஜகவினர் அவர்கள் கூறிக்கொள்வதுபோல் இந்து தேசியவாதிகள் அல்ல. அவர்கள் அதிகாரத்துக்காக என்ன வேண்டு மானாலும் செய்வார்கள். பாஜக வின் சித்தாந்தத்தில் இந்து அடையாளம் ஏதுமில்லை.

சீனா உற்பத்தியில் உலக நாடுகளை விஞ்சி வருகிறது. ஆனால் ஜனநாயகமற்ற முறையில் அதை சாத்தியப்படுத்துகிறது. சீன உற்பத்திகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பாவுக்கும் அச்சுறுத்தல்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x