5 மாநில தேர்தலை தள்ளிவைக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரச்சாரம்: மத்திய அரசு மீது பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு

பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து டெல்லியில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறியதாவது:

மத்திய அரசு சார்பில் திடீரென ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த முடியாது. ஏனெனில் நமது நாட்டு ஜனநாயக அமைப்பில் ஓர் அரசு பெரும்பான்மையை இழக்கும் போது அரசு கவிழும். புதிய அரசு அமையும். இதனால் இடைக்கால அரசுகள் அமையும் வாய்ப்புகள் உள்ளன.

ஒரு வேளை ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டியிருக்கும். இது ஜனநாயகத்துக்கு எதிரானது.

எனவே, இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரான முறை என்று நான் கூறுகிறேன். எனது பார்வையில், குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு மாறுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அவர்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.

மாநிலங்களவையில் தற்போதைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. எனவே, அங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்காக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த முயல்கின்றனர். இதன்மூலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறஉள்ள ம.பி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தலை தள்ளி போட முயற்சிக்கின்றனர்.

இந்த 5 மாநில தேர்தலில் தோல்வியுறுவோம் என்ற பயமும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு வந்துவிட்டது. எனவே, அந்தத் தேர்தலை தள்ளிவைத்து, 2024 மக்களவைத் தேர்தலுடன் இணைத்து நடத்த முயல்கின்றனர். அதுவரை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். இவ்வாறு பிரசாந்த் பூஷண் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in