Published : 08 Dec 2017 09:46 AM
Last Updated : 08 Dec 2017 09:46 AM

ரோஹிங்கியா முஸ்லிம்கள் நுழைவதை தடுக்க எல்லையில் பாதுகாப்பு வேலி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் வங்கதேச எல்லையையொட்டி பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமானோர் அந்த நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவிலும், வங்கதேசத்திலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கதேச எல்லையையொட்டி அமைந்துள்ள மாநிலங்களான மேற்குவங்கம், அசாம், மிசோரம், திரிபுரா, மேகாலய மாநிலங்களின் முதல்வர்கள், உள்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசும்போது, “4,036 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்திய-வங்கதேச எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லைப் பகுதியில் ரோஹிங்கியாக்கள் நுழைவதைத் தடுக்க பாதுகாப்பு வேலி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு வேலியானது மனிதர்கள் நுழைவதைத் தடுத்தல், கண்காணிப்பு, புலனாய்வு அமைப்புகள், மாநில போலீஸார், எல்லையோர பாதுகாப்புப் படை, இதர மாநில, மத்திய அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்” என்றார்.

சர்வதேச எல்லையோரப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் கூட்டிய 4-வது கூட்டமாகும் இது. ஏற்கெனவே பாகிஸ்தான், சீனா, மியான்மர் நாட்டுனான எல்லைப் பிரச்சினைகளுக்காக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x