

ஜி20 மாநாட்டுக்கான வருகையின்போது செய்தியாளர்களிடம் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், “இந்த பயணம் விசேஷமானது. இந்தியாவின் மருமகனை வரவேற்பதாக கூறியது என்னை நெகிழ்ச்சிப்படுத்தியுள்ளது" என்றார்.
இவரது மனைவி இந்தியாவைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மகள் என்பதை மனதில் கொண்டே அவர் இந்திய மருமகன் என்று அழைக்கப்பட்டார். முன்னதாக விமானத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக ரிஷி சுனக் கழுத்தில் உள்ள டையை அக்ஷதா மூர்த்தி சரி செய்யும் புகைப்படம் வரவேற்பை பெற்றது.
நேற்று காலை பெய்த மழைக்கு இடையில் சிவப்பு குடை பிடித்து கோயிலுக்கு செல்லும்போது எடுக்கப்பட்ட ரிஷி சுனக் - அக்ஷதா ஜோடியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் மாணவர்களிடம் உரையாடிய போதும், குடியரசுத் தலைவர் அளித்த இரவு விருந்தின்போதும், ரிஷி சுனக் - அக்ஷதா தம்பதி கிழக்கு டெல்லியில் உள்ள அக்சர் தாம் கோயிலுக்கு சென்று ஒன்றாக ஆரத்தி வழிபாடு நடத்தியபோதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படங்களை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவும் பகிர்ந்துள்ளா்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி நேற்று காலை டெல்லியில் உள்ள கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.