Published : 11 Sep 2023 05:17 AM
Last Updated : 11 Sep 2023 05:17 AM
புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஓராண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பை பிரேசில் அதிபர் சில்வாவிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார்.
ஜி20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருந்தது. இதன்படி, நாடு முழுவதும் 60 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மாநாடுகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், 2-வது நாள் மாநாடு நேற்று காலை தொடங்கியது. முதலில், மாநாட்டின் கருப்பொருளான ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற தலைப்பில் 3-வதுஅமர்வு நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியாவை பொருத்தவரை ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சியை மையமாக வைத்து செயல்படவில்லை. மக்களின் வளர்ச்சியை முன்னிறுத்தியே செயல்படுகிறோம். எங்களது வளர்ச்சி மாதிரியை உலக நாடுகளுடன் பகிர்ந்து வருகிறோம். உலக நன்மை கருதி, சந்திரயான்-3 திட்டம் மூலம் கிடைத்த அரிய தகவல்களை அனைவருடனும் பகிர்ந்து வருகிறோம்.
டிஜிட்டல் பரிவர்த்தனை: இந்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்துகிறோம். இதன் காரணமாக, இந்தியாவின் குக்கிராமங்களை சேர்ந்த மக்கள், நடைபாதை வியாபாரிகள் கூட டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வணிகம் செய்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, ஜி20 தகவல் மேம்பாடு என்ற திட்டத்தை முன்வைத்தோம். இதை உறுப்பு நாடுகள் ஒருமனதுடன் ஏற்றுக்கொண்டன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது அபார வளர்ச்சி அடைந்துள்ளது. மனிதகுல நன்மைக்காக இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக சர்வதேச அளவில் விதிகளை வரையறுக்க வேண்டும்.இதன்மூலம் அனைத்து நாடுகளும் பயனடைய வேண்டும்.
சைபர் பாதுகாப்பு, கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. இதற்கு தீர்வு காண சர்வதேச அளவில் ஒழுங்கு நடைமுறைகளை வரையறுக்க வேண்டும்.
தீவிரவாத அமைப்புகள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிதி திரட்டுகின்றன. இதனால், உலக நாடுகளின் பாதுகாப்பு, வளர்ச்சி கேள்விக்குறியாகி வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட முறைகளில் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க வேண்டும்.
சர்வதேச அளவில் போக்குவரத்து, தொலை தொடர்பு, சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறைகளும் முழுமையாக மாற்றம் அடைந்துள்ளன. இதற்கேற்ப, சர்வதேச அமைப்புகளிலும் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக, ஜி20 அமைப்பு விரிவாக்கப்பட்டு, புதிதாக ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபை தொடங்கப்பட்டபோது, 51 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 200-ஐ எட்டியுள்ளது.எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊழல் தடுப்பு, டிஜிட்டல் பொது கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நவம்பரில் மாநாடு: இதைத் தொடர்ந்து, ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவு விழாநடைபெற்றது. இதில், அடுத்தஓராண்டுக்கான ஜி20 தலைமைபொறுப்பை பிரேசில் அதிபர்லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்து, வாழ்த்து தெரிவித்தார்.
நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசியபோது, ‘‘ஜி20 அமைப்பை வழிநடத்த பிரேசிலுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்றாலும், இந்தியாவின் தலைமை பொறுப்பு காலம் நவம்பர் வரை உள்ளது. எனவே, டெல்லி உச்சி மாநாட்டில் எடுத்த முடிவுகள்,ஜி20 அமைப்பின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க, நவம்பர் இறுதியில் காணொலிவாயிலாக ஜி20 மாநாடு நடத்தலாம் என்ற யோசனையை முன்வைக்கிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT