பிரதமர் மோடி முன்பு பாரத் பெயர் பலகை

பிரதமர் மோடி முன்பு பாரத் பெயர் பலகை
Updated on
1 min read

டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்பு உள்ள பெயர் பலகையில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என இடம்பெற்றுள்ளது.

ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றினார். சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கும் தலைவர்களின் இருக்கை முன்பு சம்பந்தப்பட்டவரின் நாட்டின் பெயர் பலகை இடம்பெறும். அந்த வகையில் நேற்று பிரதமர் மோடியின் முன்பு இருந்த பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என எழுதப்பட்டிருந்தது.

இதுபோல ஜி 20 மாநாட்டின் பல்வேறு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இந்தியாவுக்கு பதில் ‘பாரத்' என்ற பெயர் இடம்பெற்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தெளிவாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் இரவு விருந்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அதில் ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியா என்ற பெயரை புறக்கணிக்க அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக, தங்கள் கூட்டணிக்கு ‘இண்டியா' என பெயர் வைத்ததாலேயே அரசு பாரத் என்ற பெயரை பயன்படுத்துவதாக குறை கூறி வருகின்றனர்.

ஆனால், இந்திய அரசியல் சாசனத்தின் 1-வது பிரிவில் இந்தியா அல்லது பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளதால் பாரத் என்ற பெயரைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை என அரசுத் தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in