

டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதாக பிரதமர் அறிவிப்பு: டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, டெல்லி ஜி20 பிரகடனம் அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளதாக மாநாட்டின் தலைவரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேசையை ஹம்மர் கருவியைக் கொண்டு தட்டி அவர் இதை அறிவித்தார். அப்போது, அருகில் இருந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட அரங்கில் உள்ள தலைவர்கள் கைகளைத் தட்டி வரவேற்றனர்.
இந்தப் பிரகடனத்தில் உலகின் தெற்கின் வளர்ச்சிக்கான இந்தியாவின் முன்னுரிமைகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதாகவும், இதற்கு மற்ற நாடுகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேற்கு உலகம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட தெற்கு உலகின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளை பிரதமர் மோடி தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜி20 உச்சி மாநாட்டின் பிரதமர் மோடி பேச்சு: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார். முதல் அமர்வு காலை 10.30 மணிக்கு மாநாட்டின் இந்த ஆண்டு தலைப்பான "ஒரு பூமி" என்ற தலைப்பில் நடந்தது. அதனைத் தொடர்ந்து மதிய உணவு நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டாவது அமர்வு "ஒரு குடும்பம்" என்ற தலைப்பில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.
ஜி20 உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்ற மேடையில் கோனார்க் சக்கரம் அமைக்கப்பட்டிருப்பது பலவரது கவனத்தை ஈர்த்தது.
“ஜி20 நாடுகளின் தலைவர் என்ற முறையில், முழு உலகையும் ஒன்றிணைத்து, உலகளாவிய நம்பிக்கைப் பற்றாக்குறையை உலகளாவிய நம்பிக்கையாக மாற்ற இந்தியா அழைப்பு விடுக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக நடக்க வேண்டிய நேரம் இது, மேலும் 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி' என்ற மந்திரம் நம் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளியாக மாறும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
கொந்தளிப்பான உலகப் பொருளாதாரம் அல்லது வடக்கு-தெற்கு பாகுபாடு, அல்லது கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான தூரம், உணவு, எரிபொருள் மற்றும் உரங்கள் நிர்வாகம், அல்லது பயங்கரவாதம் மற்றும் சைபர் பாதுகாப்பைக் கையாளுதல், அல்லது ஆரோக்கியம், எரிசக்தி மற்றும் நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்தல் என எதுவாக இருந்தாலும் சரி, இந்த சவால்களுக்கு நாம் உறுதியான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும், நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி முன் வைக்கப்பட்ட ‘பாரத்’ பெயர்ப் பலகை: இந்தியா தலைமையேற்று நடத்திவரும் இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்னால் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்தியாவுக்கு பதிலாக அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள பாரத் என்ற பெயரை ஜி 20 மாநாட்டின் பல்வேறு அதிகாரபூர்வ ஆவணங்களில் அரசு பயன்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜி20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பு நாடான ஆப்பிரிக்க யூனியன்: ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நடைமுறை நிறைவேறியது. இதற்கான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் முன்மொழிய, பின்னர் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
“அவர்கள் அரசியல் செய்திருக்கக் கூடாது” - கார்கே: குடியரசுத் தலைவரின் ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாதது சர்ச்சை ஏற்படுத்திய இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் அவர்கள் அரசியல் செய்திருக்கக் கூடாது என்று பாஜகவை கார்கே விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி கூறும்போது,"நாட்டின் 60 சதவீத மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரை அவர்களுக்கு மதிக்கத் தெரிவியவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்று கூறியிருந்தார்.
ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது: கடந்த 2014-17-ஆம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்டது. அந்த வழக்கில் சனிக்கிழமை அதிகாலை முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
மொராக்கோ பூகம்பம்: 600-ஐ கடந்த உயிரிழப்பு: வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில், "மொராக்கோ பூகம்பத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மிகுந்த வேதனை தருகின்றது. இந்தத் துயர்மிகு தருணத்தில் மொராக்கோ மக்களுடன் எனது எண்ணங்கள் நிற்கின்றன. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெறட்டும். மொராக்கோவின் இந்தத் துயரமான தருணத்தில் இந்தியா அனைத்துவித உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கின்றது" என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதானி விவகாரத்தில் காங்கிரஸ் புதிய விமர்சனம்: ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்’ என்பது ஜி20-ன் கருப்பொருள். ஆனால் பிரதமர் மோடியோ ‘ஒரு மனிதர், ஓர் அரசு, ஒரு வணிக குழுமம்’ என்பதையே நம்புவதாகத் தெரிகிறது என்று அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுகுறித்த காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் ஊழலுக்கு எதிரான முந்தைய ஜி20 உச்சி மாநாடு பேச்சுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கிடுமாறு தமிழக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
“இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது முடியாத ஒன்று”: இந்திய கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது முடியாத காரியமாக இருக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அணியில் பவுலிங் ஆல்ரவுண்டர் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.