Published : 09 Sep 2023 06:56 PM
Last Updated : 09 Sep 2023 06:56 PM
புதுடெல்லி: "21-ம் நூற்றாண்டு உலகுக்கு புதிய திசையைக் காட்டும் காலமாகும். பழைய சாவல்களுக்கு நம்மிடமிருந்து புதிய தீர்வுகள் கோரும் காலமிது. அதனால் மனிதனை மையப்படுத்திய அணுகுமுறையுடன், நமது பொறுப்புகளை நிறைவேற்ற நாம் முன்னேற வேண்டும்" என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி பேசும்போது, “முறைப்படியான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன், மொராக்கோவில் சிறிது நேரத்திற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய நாம் பிரார்த்திப்போம். இந்தக் கடினமான நேரத்தில் முழு உலக சமூகமும் மொராக்கோவுடன் உள்ளது. அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நாம் இன்று கூடியிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஒரு தூண் நிற்கிறது. இந்தத் தூணில் பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ள சொற்கள் உள்ளன. அதன் பொருள் "மனிதகுலத்தின் நலனும் மகிழ்ச்சியும் எப்போதும் உறுதிசெய்யப்பட வேண்டும்." இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன், இந்திய தேசம் இந்தச் செய்தியை முழு உலகிற்கும் வழங்கியது. இந்தச் செய்தியை நினைவுகூர்ந்து இந்த ஜி-20 மாநாட்டைத் தொடங்குவோம்.
21-ம் நூற்றாண்டு உலகுக்கு புதிய திசையைக் காட்டும் காலமாகும். பழைய சாவல்களுக்கு நம்மிடமிருந்து புதிய தீர்வுகள் கோரும் காலமிது. அதனால், மனிதனை மையப்படுத்திய அணுகுமுறையுடன், நமது பொறுப்புகளை நிறைவேற்ற நாம் முன்னேற வேண்டும்.
கோவிட் 19-க்கு பின்னர் உலகில் மிகப்பெரிய அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள மோதல்கள் (உக்ரைன் போர்) அந்த நம்பிக்கையின்மையை தீவிரப்படுத்தியுள்ளது. நம்மால் கோவிட் 19 தோற்கடிக்க முடியும் போது, இந்த அவநம்பிக்கையையும் வெற்றி கொள்ள முடியும். ஜி20 க்கு தலைமையேற்றிக்கும் நாடாக, இந்த நம்பிக்கையின்மையை நாம் ஒவ்வொருவரும் மற்றவருக்குள் நம்பிக்கையாக மாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த உலகையும் இந்தியா கேட்டுக்கொள்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடக்கும் நேரமிது. 60 நகரங்களில், 200-க்கு அதிகான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இந்தியாவில் இது மக்களின் ஜி20 ஆக மாற்றியுள்ளது" என்று பிரதமர் தெரிவித்தார்.
உலகை குடும்பமாக பார்க்கும் இந்தியா: மேலும், பிரதமர் தொடர்ந்து பேசியது: "இந்தியா நம்பிக்கை, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை கொண்ட நாடு. உலகின் பல முக்கிய மதங்கள் இங்கு பிறந்தன, உலகின் ஒவ்வொரு மதமும் இங்கு மரியாதையைப் பெற்றுள்ளன. 'ஜனநாயகத்தின் தாய்' என்ற முறையில், உரையாடல் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மீதான நமது நம்பிக்கை காலங்காலமாக அசைக்க முடியாதது. 'உலகம் ஒரு குடும்பம்' என்று பொருள்படும் 'வசுதைவ குடும்பகம்' என்ற அடிப்படைக் கோட்பாட்டில் நமது உலகளாவிய நடத்தை வேரூன்றியுள்ளது.
உலகை ஒரே குடும்பமாகக் கருதும் இந்த எண்ணமே, ஒவ்வொரு இந்தியரையும் 'ஒரே பூமி' என்ற பொறுப்புணர்வுடன் இணைக்கிறது. 'ஒரே பூமி' என்ற உத்வேகத்துடன்தான் இந்தியா 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் முன்முயற்சி மற்றும் உங்கள் ஆதரவால், பருவநிலை பாதுகாப்பு கொள்கைகளுக்கு ஏற்ப, இந்த ஆண்டு முழு உலகமும் 'சர்வதேச சிறுதானிய ஆண்டை' கொண்டாடுகிறது. இந்த உத்வேகத்திற்கு ஏற்ப, இந்தியா 'பசுமை தொகுப்பு முன்முயற்சி - ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு ' என்ற திட்டத்தை சிஓபி-26-ல் தொடங்கியது.
இன்று, பெரிய அளவிலான சூரியப் புரட்சி நடந்து கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக நிற்கிறது. லட்சக்கணக்கான இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்தை தழுவியுள்ளனர். இது மனித ஆரோக்கியத்தையும் மண் மற்றும் பூமியின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு பெரிய பிரச்சாரமாகும். பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவில் 'தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன்' என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளோம். இந்தியாவின் ஜி20 மாநாட்டின் போது, உலகளாவிய ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.
ஆற்றல் மாற்றத்தின் தேவை: பருவநிலை மாற்றத்தின் சவாலை மனதில் கொண்டு, ஆற்றல் மாற்றம் 21-ம் நூற்றாண்டின் உலகின் குறிப்பிடத்தக்க தேவையாகும். அனைவரையும் உள்ளடக்கிய எரிசக்தி மாற்றத்திற்கு டிரில்லியன் கணக்கான டாலர்கள் தேவை. இயற்கையாகவே, வளர்ந்த நாடுகள் இதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஆண்டு, 2023-ம் ஆண்டில், வளர்ந்த நாடுகள் ஒரு சாதகமான முன்முயற்சியை எடுத்ததில் இந்தியாவுடன், உலகளாவிய தெற்கில் உள்ள அனைத்து நாடுகளும் மகிழ்ச்சியடைகின்றன. வளர்ந்த நாடுகள் முதல் முறையாக பருவநிலை நிதிக்காக 100 பில்லியன் டாலர் என்ற தங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்துள்ளன.
'பசுமை மேம்பாட்டு ஒப்பந்தத்தை' ஏற்றுக்கொள்வதன் மூலம், நிலையான மற்றும் பசுமை வளர்ச்சிக்கான தனது உறுதிப்பாட்டை ஜி -20 மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கூட்டு முயற்சியின் உத்வேகத்துடன், இன்று, இந்த ஜி -20 மேடையில் இந்தியாவுக்கு சில பரிந்துரைகள் உள்ளன. எரிபொருள் கலப்புத் துறையில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய தேவையாகும். பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதம் வரை கொண்டு செல்ல உலக அளவில் முயற்சி எடுப்பது எங்கள் திட்டம். அல்லது
மாற்றாக, பெரிய உலகளாவிய நன்மைக்காக மற்றொரு கலப்பு கலவையை உருவாக்குவதில் நாம் பணியாற்றலாம், இது ஒரு நிலையான ஆற்றல் விநியோகத்தை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் காலநிலை பாதுகாப்பிற்கும் பங்களிக்கிறது. இந்த சூழலில், இன்று, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை தொடங்குகிறோம். இந்த முயற்சியில் இணையுமாறு இந்தியா உங்கள் அனைவரையும் அழைக்கிறது.
பசுமைக்கடன் முன்முயற்சி: சுற்றுச்சூழலை மனதில் கொண்டு, கார்பன் கிரெடிட் குறித்த விவாதங்கள் பல தசாப்தங்களாக நடந்து வருகின்றன. கார்பன் கிரெடிட் என்ன செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது; இது ஒரு எதிர்மறை கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, என்ன சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பெரும்பாலும் போதுமான கவனம் பெறுவதில்லை. நேர்மறையான முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. கிரீன் கிரெடிட் நமக்கு முன்னோக்கிய வழியைக் காட்டுகிறது. இந்த நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்க, ஜி -20 நாடுகள் 'பசுமை கடன் முன்முயற்சி'யில் செயல்படத் தொடங்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.
இந்தியாவின் சந்திரயான் திட்டத்தின் வெற்றியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதிலிருந்து பெறப்படும் தரவுகள் மனிதகுலம் முழுமைக்கும் பயனளிக்கும். அதே உத்வேகத்துடன், 'சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை கண்காணிப்புக்கான ஜி 20 செயற்கைக்கோள் மிஷன்' ஏவ இந்தியா முன்மொழிகிறது. இதிலிருந்து பெறப்படும் பருவநிலை மற்றும் வானிலை தரவுகள் அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த முயற்சியில் இணையுமாறு அனைத்து ஜி-20 நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுக்கிறது. மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வரவேற்பும் வாழ்த்துகளும். இப்போது, உங்கள் எண்ணங்களைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்" என்று பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT