

புதுடெல்லி: தமிழக அரசு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அவசர வழக்கை தொடர்ந்தது. அதில், தினமும் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி கர்நாடக அரசு நேற்று பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:
கர்நாடகாவில் காவிரி மற்றும் கிருஷ்ணா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிகழாண்டில் 66 சதவீதம் குறைவாக மழை பொழிந்துள்ளதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. சாதாரண ஆண்டுகளில் நீர் பங்கீடு செய்வதைப் போல இந்த ஆண்டு நீர் பங்கீட முடியாது. வறட்சி காலங்களில் நீர் பங்கீடு செய்வதற்கான முறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை.
அதேவேளையில் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான நீர் இருப்பில் உள்ளது. அந்த நீரை தமிழகம் முறையாக பயன்படுத்தவில்லை என கடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மத்திய அரசின் உறுப்பினர் தெரிவித்தார். எனவே ஆணையம் 24 ஆயிரம் கன அடிக்கு பதிலாக, தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி திறக்குமாறு உத்தரவிட்டது. இதனை 3 ஆயிரம் கனஅடியாக குறைக்கக் கோரி செப்.2-ம் தேதி கர்நாடக அரசு சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆணையத்தின் உத்தரவை மதித்து தமிழகத்துக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் கர்நாடகாவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே செப்டம்பர் 12-க்கு பிறகு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவது சாத்தியமில்லை. 2023 - 24-ம் ஆண்டை சாதாரண நீர் ஆண்டாக கணக்கிடுவது முற்றிலும் நியாயமற்றது. தவறான கணிப்பின்படி நீர் பங்கீடு செய்தால் கர்நாடகாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். எனவே தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.