சனாதனம் குறித்த திமுகவின் கருத்தை ஏற்கவில்லை: காங்கிரஸ் கட்சி விளக்கம்

சனாதனம் குறித்த திமுகவின் கருத்தை ஏற்கவில்லை: காங்கிரஸ் கட்சி விளக்கம்
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்கெரா டெல்லியில் நேற்று கூறியதாவது:

எங்களைப் பொறுத்தவரை அனைத்து மதங்கள், நம்பிக்கைகளை மதிக்கிறோம். எந்தவொரு மதம், நம்பிக்கை குறித்தும் அவதூறாகப் பேசக்கூடாது. இதுபோன்ற கருத்துகளை இந்திய அரசமைப்பு சாசனம் ஏற்கவில்லை. சனாதன தர்மம் குறித்த திமுக தலைவர்களின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை.

ஒருவரின் கருத்தை திரித்துக் கூற பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் அவர் தாராளமாக திரித்து பேசட்டும். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் அனைத்து மதங்கள், சமுதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளை மதிக்கின்றன.

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவை கொண்டாடுகிறோம். பாரத ஒற்றுமை யாத்திரை மூலம் மக்களிடம் ஒற்றுமை உணர்வு வலுப்படுத்தப்பட்டது.

ஆனால் சில சக்திகள் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றன. அவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். எங்களைப் பொறுத்தவரை நாட்டுமக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்த்து வருகிறோம். நாட்டில் பிரிவினையை தூண்டும் மிகப்பெரிய சக்திகளோடு போராடி வருகிறோம்.

அகண்ட பாரதம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அடிக்கடி பேசி வருகிறார். இந்தியாவில் வாழும் 15 சதவீத முஸ்லிம்களைக்கூட அவரால் அரவணைத்து செல்ல முடியவில்லை. ஒருவேளை அகண்ட பாரதம் உருவானால் சுமார் 45 சதவீதம் பேர் முஸ்லிம்களாக இருப்பார்கள். அவர்களை எப்படி மோகன் பாகவத்தால் அரவணைக்க முடியும்.

இந்தியா, பாரத் இரண்டுமே ஒன்றுதான். ஆனால் இந்த விவகாரத்தில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த மத்தியில் ஆளும் பாஜக முயற்சி செய்கிறது.

ஆங்கிலத்தில் கோல்டு என்றும் இந்தியில் சோனா என்றும் கூறுகின்றனர். என்ன பெயரிட்டு அழைத்தாலும் விலை ஒன்றுதான், தரமும் ஒன்றுதான்.

இவ்வாறு பவன் கெரா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in