Published : 27 Dec 2017 05:52 PM
Last Updated : 27 Dec 2017 05:52 PM

நிரூபிக்கத் தவறிய சிபிஐ: ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர், 14 பேர் விடுவிப்பு

அரசு குடியிருப்புகளை ஒதுக்கும் விவகாரத்தில் ஊழல் செய்ததாக 21 ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் பி.கே.துங்கன் வழக்கை எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில் சிபிஐ மீண்டும் அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதால் துங்கன் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் 71 வயது துங்கன் தவிர மேலும் 14 பேரையும் விடுவித்தது சிறப்பு சிபிஐ நீதிமன்றம்.

சிறப்பு சிபிஐ நீதிபதி காமினி லாவ், கூறும்போது நகர்ப்புற வளர்ச்சித் துறை முன்னாள் இணை அமைச்சர் துங்கன் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்து ஊழல் புரிந்ததற்கான ஆதாரங்களை அரசு தரப்பு சரிவர நீருபிக்கத் தவறியது என்று தெரிவித்தார்.

தனது 440 பக்க தீர்ப்பில், துங்கன் போலி விண்ணப்ப படிவங்களை உண்மை என்று காட்டி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டையும் சிபிஐ நிரூபிக்கத் தவறியது என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு குடியிருப்பு ஒதுக்கீட்டில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் பலியாடானேன், கடமையைச் செய்வதில் நான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் தெரிவித்த துங்கன், முன்னாள் அருணாச்சல பிரதேச முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தான் மூத்த குடிமகன் என்றும் தன் சொந்த மாநிலமான அருணாச்சலில் தான் இருக்க முடியாமல் 22 ஆண்டுகளாக இந்த வழக்குக்காக டெல்லியில் இருக்க வைக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தார் துங்கன்.

1996-ம் ஆண்டு இந்த ஊழல் குறித்த புகார் பதிவு செய்யப்பட்டது. 2003-ம் ஆண்டு சிபிஐ இதற்கான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. மோசடி, போலி ஆவணங்கள், குற்றச் சதி, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் 2009-ல் பதியப்பட்டன.

துங்கன் மற்றும் 18 பேர் இந்த வழக்கை அப்போது முதல் எதிர்கொண்டு வந்தனர்.

துங்கன் ‘குடியிருப்பை ஒதுக்கலாம்’ என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர, ஒதுக்குங்கள் என்று ஆணையிடவில்லை. ஒதுக்கலாம் என்பது அதிகாரிகளுக்கான ஆணையாக ஏற்க முடியாதது, என்று கூறிய சிபிஐ நீதிமன்றம், அரசு தரப்பு தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியது என்று அனைவரையும் விடுவித்தது.

துங்கன் 1975-ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தின் இளம் முதல்வராக 29 வயதில் பொறுப்பேற்றார். இவர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த போது 1991-96-ல் சொத்துக் குவிப்பு செய்ததாக புகார் எழுந்தது. அதாவது, ரூ.1.08,16,532 வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இந்த வழக்கிலும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று இவர் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x