

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் முதல் முறையாக செல்பி எடுத்ததுடன் பூமி, நிலாவையும் படம் எடுத்து அனுப்பி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனின் வெளிப் பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை கடந்த 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனை பெங்களூருவில் உள்ள இஸ்ரோகட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணித்து வரும் விஞ்ஞானிகள், அதன் சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரோ தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “சூரியன்-பூமி எல்1 புள்ளியை நோக்கி விண்ணில் பயணித்து வரும் ஆதித்யா எல்1 விண்கலம் செல்பி எடுத்துள்ளது. அத்துடன் பூமி மற்றும் நிலாவை படம் எடுத்து அனுப்பி உள்ளது” என பதிவிட்டுள்ளது. அத்துடன் 41 விநாடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், விண்கலத்தில் இடம்பெற்றுள்ள விஇஎல்சி மற்றும் எஸ்யுஐடி ஆகிய கருவிகளின் படம் (செல்பி) தெரிகிறது. அத்துடன் பூமி, நிலாவின் படமும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் கடந்த 4-ம் தேதி எடுக்கப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த விண்கலத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக 7 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியில் சவாலான கருவியான விஇஎல்சி, எல்-1 பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு தினமும் 1,440 படங்களை எடுத்து அனுப்பும் என கூறப்படுகிறது.
சுமார் 4 மாத கால பயணத்துக்கு பிறகு, 2024 ஜனவரி தொடக்கத்தில் பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள லாக்ரேஞ்சியன் பாயின்ட் 1 (எல்-1) பகுதியில் இந்தவிண்கலம் நிலை நிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்து சூரியனின்வெளிப்புற பகுதியை ஆதித்யா-எல்1 ஆராய உள்ளது.