Last Updated : 09 Dec, 2017 03:29 PM

 

Published : 09 Dec 2017 03:29 PM
Last Updated : 09 Dec 2017 03:29 PM

உரிமத்தை ரத்து செய்தது நியாயமற்ற நடவடிக்கை: டெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர்

உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக அறிவித்த டெல்லி மருத்துவமனையின் உரிமத்தை டெல்லி அரசு ரத்து செய்துள்ளது இந்த நடவடிக்கை கடுமையானது, அநீதியானது, நியாயமற்றது என்று டெல்லி மாக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் 6 மாத கர்ப்பிணி ஒருவர் வயிற்று வலி காரணமாக சேர்க்கப்பட்டார். கடந்த 30-ம் தேதி அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒன்று இறந்தே பிறந்தது. உயிருடன் இருந்த மற்றொரு குழந்தையும் சில மணி நேரங்களில் இறந்துவிட்டதாக அறிவித்த டாக்டர்கள் சிசுக்களின் உடல்களை பாலிதீன் கவரில் சுற்றி ஒப்படைத்தனர்.

அதில், பிறந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிசு உயிருடன் இருப்பது தெரிந்தது.வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிசு, சிகிச்சை பலனின்றி கடந்த 6-ம் தேதி இறந்தது.

மருத்துவமனையின் மீது குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவும், மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியது.

இந்நிலையில், மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை டெல்லி அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக டெல்லி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ‘‘மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்துள்ளோம். பிறந்த குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் அது இறந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது’’ என்றார்.

இந்த நடவடிக்கை குறித்து மாக்ஸ் மருத்துவமனை தெரிவிக்கும் போது, “உரிம ரத்து நோட்டீஸ் எங்கள் கைக்கு வந்தது. இந்த உத்தரவு மிகக்கடுமையானது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஒரு தனிப்பட்ட மருத்துவர் அல்லது நபரின் தவறாக இருந்தால் கூட மருத்துவமனையை அதற்குப் பொறுப்பாக்குவது நியாயமற்றது. இதனால் நோயாளிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் டெல்லியில் ஏற்கெனவே உள்ள மருத்துவமனை எண்ணிக்கைக் குறைபாட்டினால் உள்ள பிரச்சினைகளை அதிகரிக்கும்.

ஆகவே அனைத்து வழிகளையும் பரிசீலித்து வருகிறோம். நோயாளிகளுக்கு அக்கறையுடன் சிகிச்சை அளிக்கும் எங்களது பொறுப்பின் மீது எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் உறுதியும் உள்ளது” என்று மருத்துவமனை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x