

புதுடெல்லி: டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) இடைநிலைப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஹாரிஸ் உல் ஹக். இவருக்கு எதிராக ஜாமியா நகர் காவல் நிலையத்தில் ஜேஎம்ஐ பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஜூலை 31-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
அப்புகாரில், “துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதாக கூறி மாணவர்களிடம் ஹாரிஸ் உல் ஹக் முறைகேடாக ரூ.1.40 லட்சம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார்” என கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் பல்கலைக்கழக நிர்வாகக் குழு கூட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முன் வைக்கப்பட்டது. அப்போது ஹாரிஸ் உல் ஹக் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் வசூலிக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், சட்டவிதிகளின்படி கிரிமினல் புகார் அளிக்கவும் பல்கலைக்கழகத்தை நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் மத்தியப் பணிவிதிகளுக்கு புறம்பாக உரியஅதிகாரிகளின் முன் அனுமதியின்றி நிதி வசூலித்ததற்காக ஹாரிஸ் உல் ஹக்கை ஜேஎம்ஐ இடைக்கால பணிநீக்கம் செய்துள்ளது. “ஹாரிஸ் மீது ஏற்கெனவே தவறான நடத்தை, பணியில் அலட்சியம், கீழ்ப்படியாமை போன்ற பல புகார்கள் உள்ளன. இதற்கு முன் கடந்த 2010-ல்தவறான நடத்தைக்காக ஹாரிஸ்உல் ஹக் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்” என்று ஜேஎம்ஐ தெரிவித்துள்ளது.