பஞ்சாபில் ‘இண்டியா’வுடன் கூட்டணி இல்லை - ஆளும் ஆம் ஆத்மி கட்சி சுற்றுலாத் துறை அமைச்சர் திட்டவட்டம்

அன்மோல் ககன் மான்
அன்மோல் ககன் மான்
Updated on
1 min read

சண்டிகர்: வரும் மக்களவைத் தேர்தலுக்காக பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்காது என்று அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் அன்மோல் ககன் மான் கூறியுள்ளார்.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியை எதிர்கொள்வதற்காக ‘இண்டியா’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்த நிலையில் இவ்விரு கட்சிகளும் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. அதிலும் பஞ்சாபில் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்நிலையில் பஞ்சாபில் காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட தலைவர்களை கட்சியின் மாநிலத் தலைவர் அமரீந்தர் ராஜா சிங் வாரிங் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதில் வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்தவித கூட்டணியும் அமைக்க காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொகுதி பங்கீடு கிடையாது: இந்நிலையில் பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவரும் மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான அன்மோல் ககன் மான் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறும்போது, “எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி சேர்ந்திருப்பது தேசிய அளவிலானது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் ஒருபோதும் எவ்வித கூட்டணியும் அமைக்க மாட்டோம்.

பாஜகவிடம் இருந்து நாட்டைகாப்பாற்ற தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளதால் விஷயங்கள் வேறு விதமாக உள்ளன. என்றாலும் பஞ்சாபில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். காங்கிரஸுடன் எவ்வித தொகுதிப் பங்கீட்டையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்றார்.

பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது 8 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. ஆம் ஆத்மி வசம் ஒரு தொகுதி உள்ளது. இதுதவிர சிரோமணி அகாலி தளம் மற்றும் பாஜக தலா 2 இடங்களை பெற்றுள்ளன.

டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளும் கடந்த 2014 முதல் பாஜக வசம் உள்ளன. இங்கு முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in