Last Updated : 09 Dec, 2017 07:37 AM

 

Published : 09 Dec 2017 07:37 AM
Last Updated : 09 Dec 2017 07:37 AM

மடாதிபதி மீது பாலியல் புகார்; வீடியோ வெளியானதால் பரபரப்பு- போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி நகரில் கல்மதா மடம் உள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இந்த மடத்தின் மடாதிபதியாக கொட்டுரேஷ்வரா (56) (எ) கொட்டூர் சுவாமிஜி உள்ளார். 1995-ம் ஆண்டு மடாதிபதியாக பொறுப்பேற்ற இவர் மீது அவ்வப்போது பாலியல் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நேற்று கன்னட தனியார் தொலைக்காட்சிகளில் கொட்டூர் மடாதிபதி ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை கண்ட பக்தர்கள் கல்மதா மடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மடாதிபதி உடனடியாக பின்புறமாக வெளியேறினார். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மடத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மடத்தின் பக்தர்களில் சிலர், கொட்டூர் மடாதிபதி இந்து மதத்தை இழிவுப்படுத்தி விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர்.

இதனால் போலீஸார் கொட்டூர் மடாதிபதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மடத்தின் ஓட்டுநர் மல்லய்யா என்பவர்தான் வீடியோவை ஊடகங்களில் கசிய விட்டுள்ளார் எனக்கூறி அவரது வீட்டை முற்றுகையிட்டனர். அங்கிருந்து தப்பிய மல்லய்யா கங்காவதி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தனக்கும் அந்த வீடியோவுக்கும் தொடர்பு இல்லை என்றும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால் பாதுகாப்பு வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

கர்நாடகாவில் நித்யானந்தா, தயானந்தா சுவாமி, பாரதிவேஸ்வர சுவாமி என தொடர்ச்சியாக மடாதிபதிகள் மீது பாலியல் புகார்கள் வெளியாகி வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x