

உதயநிதி சனாதன சர்ச்சை - பிரதமர் மோடி ரியாக்ஷன்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துக்கு ‘உரிய பதில்’ அளிப்பது அவசியம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கூட்டம் புதன்கிழமை நடந்தது. அதில்தான் சனாதன சர்ச்சை குறித்து பிரதமர் மோடி முதல்முறையாக பேசியுள்ளார். மத்திய அமைச்சர்களிடம் அவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்; எனினும், வரலாறு பற்றி யாரும் பேச வேண்டாம். அரசியலமைப்பை ஒட்டிய உண்மைகளில் உறுதியாக இருங்கள். இது குறித்த தற்காலச் சூழல்கள் குறித்து பேசுங்கள்” என்றார். அதேநேரத்தில், “இந்தியா - பாரத் சர்ச்சை குறித்து யாரும் பேச வேண்டாம். இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் பேச வேண்டும்" என்று அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி சேர்ப்பு: தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அந்தக் குழுவில், முதன்முறையாக யுஜிசி பிரதிநிதி இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
“இந்தியர்களின் மனதை புண்படுத்தக் கூடாது” - கனிமொழி எம்.பி: "எல்லா திட்டங்களுக்கும் புரியாத பெயர்களை வைக்கும் ஒன்றிய அரசுக்கு, பாரத் என பெயர் மாற்றுவது சாதாரண ஒன்றாக தோன்றலாம். இப்படி பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
இதனிடையே, "நாட்டுக்கு பெயர் மாற்றுவதால் என்ன ஆகப் போகிறது. 150 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. பெயரை மாற்றியதால் தள்ளுபடி செய்துவிடுவார்களா? அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, பசியில்லாத பாரதம் அப்படியெல்லாம் உருவாகி விடுமா? ஆட்சிக்கு வந்தபோதே பாரத் என்று ஏன் பெயர் மாற்றவில்லை?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சனாதன தர்மம்: உதயநிதிக்கு அண்ணாமலை சவால்: “உதயநிதிக்கு சவால் விடுகிறேன்... 2024 மக்களவைத் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களை சனாதன தர்மத்துக்கான தேர்தலாக வைத்துக் கொள்வோம். நீங்கள் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என வாக்குறுதி அளியுங்கள்; நாங்கள் சனாதன தர்மத்தை காப்பாற்றுவோம் என்று சொல்கிறோம். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
காவிரி பிரச்சினையில் தமிழக அரசின் மனு மீது செப்.21-ல் விசாரணை: காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு வரும் செப்டம்பர் 21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கே மீது வழக்குப் பதிவு: மத உணர்வுகளை சீர்குலைத்ததாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் வழக்கறிஞர்கள், கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“இந்தியா என்ற பெயரை எதிர்த்தவர் ஜின்னா தான்”: “இந்தியா என்ற பெயரை பாகிஸ்தானை நிறுவிய தலைவர் முகமது அலி ஜின்னா தான் எதிர்த்தார். ஏனெனில், இந்தியா என்ற பெயர் பிரிட்டிஷ் அரசின் வாரிசாக நம்மையும், பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து வெட்டுண்டுபோன தேசம் என்றும் அடையாளப்படுத்தியதால் அவர் அந்தப் பெயரை எதிர்த்தார். அந்த வழியில் இப்போது ஜின்னோவோடு இயைந்து பாஜகவும் எதிர்க்கிறது” என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்: இம்மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நோக்கம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அத்துடன், விலைவாசி உயர்வு முதல் அதானி விவகாரம் வரை 9 பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, அவை குறித்து இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு, பாரத் - ஜெய்சங்கர் விளக்கம்: சீன அதிபர் ஜி ஜிபின்ங், ரஷ்ய அதிபர் புதின் இருவரும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதது புதிது இல்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9, 10-ம் தேதிகளில் நடைபெறுகிறவுள்ள நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
அதேபோல், பாரத் குறித்து பேசிய அமைச்சர், "இந்தியாதான் பாரத். அது நமது அரசியலமைப்பில் உள்ளது. அதனை அனைவரும் வாசிக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் பாரதம் என்று கூறும்போது அதில் ஒரு பொருள், அர்த்தம் இருக்கிறது. அதனுடன் ஒரு புரிதலும் உறவும் உருவாகும். இது நமது அரசியலமைப்பிலும் பிரதிபலிப்பதாக நான் கருதுகிறேன்" என்றார்.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், கோவை, நீலகிரி, தேனி, மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.