Published : 06 Dec 2017 08:20 AM
Last Updated : 06 Dec 2017 08:20 AM

காங்கிரஸ் கட்சி தேசிய தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது

காங்கிரஸின் தேசிய தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனுவை தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்றுமுன்தினம் ராகுல் காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதுகுறித்து அந்த கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியபோது, “ஒட்டுமொத்தமாக 89 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ராகுல் காந்தியை கட்சியின் தேசிய தலைவராக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.

வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் 11-ம் தேதி கடைசி நாள். ஒருவருக்கு மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தால் வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும். டிசம்பர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

தற்போது ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கட்சியின் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் ராகுல் காந்தி தேசிய தலைவராக பதவியேற்பார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராகுலின் அரசியல் பயணம்

கடந்த 1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி ராஜீவ் காந்தி, சோனியா தம்பதிக்கு மகனாக பிறந்தார் ராகுல். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனான அவர், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் பயின்றார். பின்னர் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்தார். பிறகு மேல் படிப்புக்காக பிரிட்டன் சென்றார். 1995-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் எம்பில் பட்டம் பெற்றார். பின்னர், லண்டனில் உள்ள நிர்வாக ஆலோசனை நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றினார். அரசியலுக்கு வருவது அவரது முதல் நோக்கமாக இல்லை. இதனால் நாடு திரும்பிய அவர் மும்பையில், தனியாக ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கினார்.

கடந்த 2004-ம் ஆண்டுதான் ராகுல் அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அப்போது நடந்த மக்களவை தேர்தலில் தனது தந்தை ராஜீவ் காந்தியின் அமேதி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு, சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராகுலை இளவரசர் என்று எதிர்க்கட்சியினர் முத்திரை குத்தினர். வாரிசு அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினர்.

அதைப்பற்றி கவலைப்படாமல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 2007-ல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இளைஞர் காங்கிரஸ் மற்றும் தேசிய மாணவர் அமைப்பு (என்எஸ்யுஐ) ஆகியவற்றின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

2009 மக்களவைத் தேர்தலில் 2-வது முறையாக அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முன்வந்தார். ஆனால் அவர் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ராகுல், 2013-ல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, தெலங்கானா சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலிலும் மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஹரியாணா, அசாம், கேரளா உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ராகுல் விரைவில் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x