Last Updated : 06 Sep, 2023 05:29 AM

 

Published : 06 Sep 2023 05:29 AM
Last Updated : 06 Sep 2023 05:29 AM

இந்தியாவை இனி ‘பாரத்’ என அழைக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: அசாமில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத், ‘இந்தியாவை இனி ‘பாரத்’ என்றழைக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, இந்தியாவின்பெயரை பாரத்’ என மாற்ற முயற்சிப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.

அசாம் மாநிலம் குவாஹாட்டியில் 2 தினங்களுக்கு முன்பு ஜெயின் சமூகத்தினர் சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசும்போது, ‘‘இனி இந்தியாவை அதன் பழைய பெயரான ‘பாரத்' என அழைக்க வேண்டும். ஏனெனில், பல நூற்றாண்டுகளாக பாரத் எனும் பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. இந்தியா என அழைப்பதை நாம் நிறுத்தினால்தான் மாற்றம் வரும். பாரத் என்றே அழைத்து மற்றவர்களுக்கும் இதை உணர்த்த வேண்டும்’’ என்றார்.

இந்நிலையில், டெல்லியில் வரும் 9, 10 தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் வெளிநாட்டினருக்கு குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்துக்கான அழைப்பிதழில், இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஊடகங்களில் நேற்று செய்தியாகி வைரலானது.

இதையடுத்து, வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில், இப்பெயர் மாற்றம் உறுதி செய்யப்பட உள்ளதாகவும் சர்ச்சை கிளம்பி உள்ளது.

கடந்த ஜுலை மாதம் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், பாஜக எம்.பி.நரேஷ் பன்ஸல் மாநிலங்களவையில் வைத்த கோரிக்கையில், ‘இந்தியா என்ற பெயர் காலணி ஆதிக்கத்தின் சின்னமாக உள்ளது. இப்பெயர், இந்திய அரசியலமைப்பு சட்டத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயரால் வைக்கப்பட்டது. இதன் உண்மையான பண்டையக் காலத்து பெயர் பாரத். இதன் வேர்கள் இந்திய சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன’’ எனக் கூறியுள்ளார்.

இதுபோல, பாஜகவின் மற்றொரு மாநிலங்களவை எம்.பி.யான ஹர்நாத்சிங் யாதவ், ‘‘எதிர்க்கட்சிகள் இண்டியா எனும் தங்கள் கூட்டணியின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.

ஆரியவர்தம்: தற்போது சர்ச்சையாகி உள்ள பெயர் மாற்றம் குறித்து வரலாற்றாளர்கள் இடையே ஒரு கூற்று உள்ளது. இதன்படி, வெளியிலிருந்து வந்தவர்களான ஆரியர்கள் இந்தியாவில் 5 கூட்டங்களாக வாழ்ந்துள்ளனர். எதிர்காலத்தில் இவர்கள் ஆரியர் அல்லாதவர்களையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். இவர்கள் ஆட்சி செய்த பகுதி ‘ஆரியவர்தம்' என்றழைக்கப்பட்டது. இது இன்றைய பஞ்சாபும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ஆகும்.

ஆரியவர்தத்தின் முக்கிய ஆட்சியாளர்களாக பரதா மற்றும் திரிசு என இருவர் இருந்தனர். இவர்களில் பரதா ஆண்ட பகுதி பாரத் என்றழைக்கப்பட்டது. இந்த பரதா சிறுவயது முதல் வீரத்துக்கு பெயர் போனவர் எனப் புராணக் கதைகள் கூறுகின்றன. அவர் தங்கள் கூட்டத்தினரை தாக்க வந்த சிங்கத்தின் வாயை பிளந்து கொன்றதாகவும் அக்கதையில் வருகிறது.

மகாபாரதம்: இதனால், ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் பரதா கூட்டத்தினர் மிகவும் முக்கியமானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தினருக்கு இடையே நடைபெற்ற போரின் இதிகாசமே மகாபாரதம் என எழுதப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதனால் பரதாவின் பெயரையே பாரத் என, இந்தியாவின் பெயராக மாற்றும் முயற்சி தற்போது நடப்பதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x