

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது: சனாதன தர்மத்தை இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஊக்குவிக்கும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில முக்கிய தீர்மானங்களை இந்த அறங்காவல் குழுவில் எடுத்துள்ளது.
எல்.கே.ஜி முதல், பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஒரு கோடி பகவத் கீதை புத்தகங்களை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களில் 10 லட்சத்து ஆயிரத்து 116 முறை ‘கோவிந்த நாமம்’ எழுதுவோருக்கு விஐபி பிரேக் தரிசன ஏற்பாடுகள் செய் யப்படும்.
திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள 413 காலி இடங்களை நிரப்ப ஆந்திர அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி பிரம்மோற்சவத்தின் முதல்நாள், அன்று ஆந்திர அரசு சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காணிக்கையாக வழங்க உள்ளார். திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரத்தை இடித்து, அந்த இடத்தில் சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் தங்கும் விதத்தில் ரூ. 600 கோடி செலவில் விடுதிகள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.