

புதுடெல்லி: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உதய நிதிக்கு எதிராக தாமாக முன் வந்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்உதயநிதி பேசும் போது, ‘சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல்காரியம்' என்று பேசினார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி பேசியது குறித்து தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என 262 பேர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சு சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கருத்துகள் மறுக்க முடியாத வகையில் இந்தியாவின் ஒரு பெரிய மக்கள்தொகைக்கு எதிரான வெறுப்பு பேச்சாக உள்ளது. பாரதத்தை ஒரு மதச்சார்பற்ற தேசமாகக் கருதும் இந்திய அரசியலமைப்பை இந்த வெறுப்பு பேச்சு தாக்குகிறது.
வெறுப்பு பேச்சால் பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது அரசு, போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யலாம்.உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை எனில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இருக்கும். இவ்வாறு அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.