

சென்னை: இந்தியாவை ‘பாரத்’ என அழைக்க வேண்டும் என தான் நெடுங்காலமாக சொல்லி வருவதாக நடிகை கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஜூனில் இந்தியாவை ‘பாரத்’ என்று அழைக்க வேண்டும் என கங்கனா ரனாவத் சொல்லியதாக செய்தி ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. அந்த ஸ்கிரீன் ஷாட் கங்கனாவின் பார்வைக்கும் கிட்டியுள்ளது. ‘அடிமை பெயரிலிருந்து விடுதலை பெற்றோம். ஜெய் பாரத்’ என சொல்லி தனது எக்ஸ் தளத்தில் அதனை ரீ-ட்வீட் அவர் செய்திருந்தார். அதோடு மற்றொரு கருத்தையும் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என நான் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறேன். மகாபாரத காலத்திலிருந்தே, குருசேத்திரப் போரில் பங்கேற்ற அனைத்து ராஜ்ஜியங்களும் பாரதம் என்ற கண்டத்தின் கீழ் வந்தன. இந்தியா என்ற பெயரை வைத்தது ஆங்கிலேயர்கள். அதன் மூலம் அவர்கள் நம்மை அடிமைகளாக பார்த்தனர். முன்பு வழக்கத்தில் இருந்த அகராதியிலும் நம்மை அப்படித்தான் குறிப்பிட்டார்கள். இந்தியா நமது நாட்டின் பெயர் அல்ல. நாம் பாரத தேசத்தை சேர்ந்தவர்கள்” என கங்கனா தெரிவித்துள்ளார்.
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ள ‘சந்திரமுகி-2’ படத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் புரோமோஷனுக்காக சென்னையில் இருப்பதாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.