Published : 04 Sep 2023 07:01 AM
Last Updated : 04 Sep 2023 07:01 AM

"சர்வாதிகாரத்தை விரும்புகிறார் மோடி" - காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: ஜனநாயக இந்தியாவை, சர்வாதிகார இந்தியாவாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கார்கே வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும். தேசியஅளவிலும், மாநில அளவிலும்எந்த கட்சியுடனும் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்திருக்கிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்கெனவே 3 கமிட்டிகள் நிராகரித்துள்ளன. இந்த சூழலில் 4-வது கமிட்டியை மத்திய அரசு நியமித்து இருக்கிறது. மத்திய அரசு நியமித்திருக்கும் குழுவில் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் எந்த பிரதிநிதியும் இடம்பெறவில்லை.

கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தல்களுக்காக ரூ.5,500 கோடி செலவிடப்பட்டது. இது மத்திய அரசின் பட்ஜெட்டின் மிக சொற்ப தொகை. இந்த தொகையில் பணத்தை சேமிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுவது முட்டாள்தனமானது.

தேர்தல் நடத்தை விதிகளை அடிக்கடி அமல்படுத்துவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றுமத்திய அரசு கூறுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தேர்தல்நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்தும் காலத்தை குறைக்கலாம், தளர்வுகளை அறிவிக்கலாம். இதுதொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் கலந்தோலோசித்து ஒருமித்த முடிவை எடுக்க முடியும்.

கட்சித் தாவல் தடை சட்டத்தை பாஜக அரசு ஏற்கெனவே நீர்த்து போகச் செய்துவிட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது பாஜகவின் வழக்கமாக இருக்கிறது. பாஜகவின் கவிழ்ப்பு நடவடிக்கைகளால் 2014-ம் ஆண்டு முதல் இதுவரை மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகள் என 436 இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

கடந்த 1967-ம் ஆண்டு வரை மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. அந்த காலத்தில் மாநிலங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளும் குறைவாக இருந்தன. இப்போது 30.45 லட்சம்உள்ளாட்சி பதவிகள் உள்ளன.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயகநாடு. நமது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த சூழலில் மக்களவை, சட்டப்பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கான சதி ஆகும். ஜனநாயக இந்தியாவை, சர்வாதிகார இந்தியாவாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது.

இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x