Published : 21 Dec 2017 10:37 AM
Last Updated : 21 Dec 2017 10:37 AM

மன்மோகன் சிங் பற்றி மோடி சர்ச்சைக்குரிய பேச்சு நாள்: முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் பாகிஸ்தானியர்கள் சிலரை சந்தித்தனர் என்றும், குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிரொலித்து வருகிறது.

மக்களவை நேற்று காலை கூடியதும் இந்த விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனிடையே மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அழைத்தார்.

ஆனால் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி செய்ததால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை தொடரவே அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவகாரம் மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது அவையை மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு நடத்திக் கொண்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்கும் கேள்வியே எழவில்லை என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து மாநிலங்களவைத் தலைவரின் இருக்கையை சூழ்ந்துகொண்டு கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இதையடுத்து பிறப்கல் 2 மணி வரை வரை 2 முறை அவையை ஒத்திவைத்தார் வெங்கய்ய நாயுடு. 2 மணிக்குப் பிறகு அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பவே அவையை அவர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

முன்னதாக கூச்சல் குழப்பத்துக்கு இடையே இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோலியம் மற்றும் சக்தி மசோதாவை தாக்கல் செய்ய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அழைத்தார். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியவாறு அவையின் மையப் பகுதிக்கு வந்தனர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x