சந்திரயான் 3-ஐ வடிவமைத்ததாகக் கூறி ஏமாற்றிய போலி விஞ்ஞானி கைது

சந்திரயான் 3-ஐ வடிவமைத்ததாகக் கூறி ஏமாற்றிய போலி விஞ்ஞானி கைது
Updated on
1 min read

புதுடெல்லி: சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்ததாகக் கூறி பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை ஏமாற்றிய போலி விஞ்ஞானியை குஜராத் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி (30), சூரத் நகரில் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்தி வந்துள்ளார். இப்பயிற்சி மையத்தில் திரளான மாணவர்களைக் கவர்வதற்காக, அவர் தன்னை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் விஞ்ஞானி என கூறி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு தான்தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டதன் பேரில், சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 ஆகியவற்றின் வடிவங்களில் சில மாற்றங்களை செய்ததாகவும் தெரிவித்துள்ளார் மிதுல். இவர், சந்திரயான்-3 நிலவில் இறங்கியபோது அதுபற்றி உள்ளூர் ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்கவும் தொடங்கியுள்ளார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடனும் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறி வந்துள்ளார். எனினும், அவற்றை நிரூபிக்க மிதுலிடம் அடையாள அட்டை உள்ளிட்ட எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

இதனால், மிதுல் மீது சந்தேகப்பட்ட சிலர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில், சூரத் நகர போலீஸார் மிதுலை அழைத்து விசாரித்துள்ளனர். இதில், பி.காம். பட்டதாரியான அவர் போலி விஞ்ஞானி என்றும், தனது பயிற்சி மையத்தை பிரபலப்படுத்த வேண்டி பொய் கூறி வந்ததும் தெரிந்துள்ளது.

இதையடுத்து, இஸ்ரோ நிறுவனத்தை அவமதித்ததாகவும், மோசடி செய்ததாகவும் மிதுல் மீது ஐபிசி 419, 465, 468 மற்றும் 471 ஆகிய பிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யயப்பட்டுள்ளன. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மிதுல் சூரத் சிறையில் அடைக்கப் பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in