

வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய ‘ஆதித்யா-எல்1’: சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக தனது நீண்ட பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. அடுத்த 125 நாட்கள் அது சூரியனை நோக்கிப் பயணித்து லாக்ராஞ்சின் எல்-1 இலக்கை எட்டும்" என்றார்.
இந்த விண்கலம் முன்கூட்டியே உணர்ந்து காந்தப் புயல் குறித்த முன்னெச்சரிக்கையை நமக்குத் தரும். நாம் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்; அதேபோல், சூரியக் காற்றின் வேகம், திசை, மின்னேற்றம் முதலியவற்றையும் இந்த விண்கலம் ஆராயும்.
இதுவரை அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளிக் கழகம், ஜப்பான், சீனா மட்டுமே சூரியனை ஆய்வுசெய்ய விண்வெளித் தொலைநோக்கிகளை அனுப்பியுள்ளன. ஆதித்யா விண்கலம் மூலம் இந்தியா ஐந்தாவது நாடாக இப்போது திகழ்கிறது.
விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் பாராட்டு: சூரியனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கிய நிலையில், அந்த வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ - ஆதரவும் எதிர்ப்பும்: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அரசியல் கட்சிகளுடனோ, நாடாளுமன்றத்திலோ ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்தார்.
இந்து ராஷ்டிர இலக்கை அடைவதற்காக பல்வேறு சட்டரீதியான ஆயத்தப் பணிகளை, பரிசோதனைகளை செய்துவருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் திடீரென சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது மரியாதை நிமித்த சந்திப்பு என்று இருதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்: ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66.
1981-ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார்.
தருமபுரியில் கனமழையால் பயிர்கள் சேதம்: தருமபுரி அருகிலுள்ள பிடமனேரி ஒருநாள் மழையிலேயே நிறைந்து உபரிநீர் விளைநிலங்களில் நுழைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அக்.2-ல் இண்டியா கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம்: மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி இண்டியா கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அக்கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
‘இந்தியாவில் திருமண அமைப்பை அழிக்க முயற்சி’: இந்தியாவில் திருமண அமைப்பை அழிக்க திட்டமிட்ட ரீதியில் முயற்சி நடப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை முன்வைத்து இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் பழங்குடியின பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: ராஜஸ்தான் மாநிலத்தில் 21 வயது நிரம்பிய பழங்குடியினப் பெண்ணை அவரது கணவர், உறவினர்கள் சேர்ந்து நிர்வாணப்படுத்தி, தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வன்கொடுமையில் ஈடுபட்ட கணவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ரூ.300-ஐ கடந்த பெட்ரோல் விலை: பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக, அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.300-ஐ தாண்டியுள்ளது. இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.