“இந்தியா என சொல்வதை நிறுத்த வேண்டும்; எல்லோரும் பாரதம் என்றே சொல்ல வேண்டும்” - மோகன் பாகவத்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
Updated on
1 min read

குவஹாத்தி: இந்தியா என்ற வார்த்தைக்குப் பதிலாக பாரதம் என்ற வார்த்தையை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் சகல் ஜெயின் சமாஜ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை: "இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நாம் அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும். மாறாக, பாரதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் ஆங்கிலம் பேசுபவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். எனவே, திரும்பத் திரும்ப அந்த வார்த்தை வந்துவிடுகிறது. இருப்பினும், இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும்.

காலம் காலமாக நமது நாட்டின் பெயர் பாரதம்தான். நாம் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் பாரதம் என்ற வார்த்தை பொது. உலகின் எந்த பகுதியிலும் பெயர்ச் சொல் மாறுவதில்லை. உதாரணத்துக்கு, கோபால் என்ற பெயரை எடுத்துக்கொண்டால், ஆங்கிலத்தில் சொல்லும்போது அது மாறுவதில்லை. நமது நாட்டின் பல நகரங்களின் பெயர்கள் காலம் காலமாக அப்படியேதான் அழைக்கப்படுகின்றன.

எனவே, உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் நமது நாட்டின் பெயர் பாரதம்தான். எனவே, எழுதும்போதும் பேசும்போதும் பாரதம் என்ற வார்த்தையையே நாம் பயன்படுத்த வேண்டும். பாரதம் என சொல்வதால் சிலருக்குப் புரியவில்லை என்றால் கவலைப்பட ஒன்றுமில்லை. அந்த நபர்தான் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அவருக்கு புரிய வைக்கத் தேவையில்லை.

நாம் சுயசார்பு உள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் இருக்கிறோம். நாம் பல மொழிகளைக் கற்கலாம். ஆனால், நாம் நமது தாய்மொழியை மறந்துவிடக் கூடாது. நமது வீடுகளில் குழந்தைகள், தங்கள் தாய் மொழியில் எண்களை எண்ணுவதில்லை. இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்" என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in