

புதுடெல்லி: பிஹாரில் மகராஜ்கஞ்ச் தொகுதியில் ஐஜத சார்பில் 3 முறையும், ஆர்ஜேடி சார்பில் ஒரு முறையும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் பிரபுநாத் சிங். கடந்த 1995-ல் நடந்த தேர்தலில் சாப்ராவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியின் அருகே ராஜேந்திர ராய் (18) மற்றும் தரோகா ராய் (47) ஆகிய இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தனக்கு வாக்களிக்காததால் இந்த கொலை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரியான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி பிரபுநாத் சிங்கை விடுதலை செய்தது. இவரின் விடுதலையை எதிர்த்து ராஜேந்திர ராயின் சகோதரர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், ஏஎஸ் ஓகா, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இரட்டைகொலை வழக்கில் ராஷ்டிரியஜனதா தள முன்னாள் எம்.பி.பிரபுநாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், இறந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்குதலா ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்’’ என்று தீர்ப்பளித்தனர்.