Published : 28 Dec 2017 10:38 AM
Last Updated : 28 Dec 2017 10:38 AM

முத்தலாக் தடை மசோதா இன்று அறிமுகம்: திரும்பப் பெற முஸ்லிம் சட்ட வாரியம் கோரிக்கை

முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு இன்று அறிமுகம் செய்ய உள்ளது.

முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்றவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து முத்தலாக் தடை மசோதாவை தயாரிக்கும் பணியில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சரவைகளுக்கு இடையிலான குழு ஈடுபட்டது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதா, மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்படும் மசோதாக்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்யவிருப்பதாக மக்களவை அலுவல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேச்சு மூலமோ, எழுத்து மூலமோ அல்லது இமெயில், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு ஊடகம் மூலமோ உடனடியாக மூன்று முறை தலாக் கூறுவதை இந்த மசோதா தடை செய்கிறது. இதை மீறும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “முத்தலாக் மசோதா ஒருமனதாக நிறைவேற அனைத்து எதிர்க்கட்சிகளும் உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

திரும்பப் பெற கோரிக்கை

இதனிடையே இந்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக முஸ்லிம் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா ரப்பே ஹசனி நத்வீ எழுதியுள்ள கடிதத்தில், “இந்த மசோதா ஷரியத் அல்லது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது. மேலும் மத சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது. மசோதா தயாரிக்கப்படுவதற்கு முன் முஸ்லிம் பெண்களின் உண்மையான பிரதிநிதிகள் கலந்து ஆலோசிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x