Published : 05 Jul 2014 04:58 PM
Last Updated : 05 Jul 2014 04:58 PM

இனி இராக் செல்லமாட்டோம்: இந்தியா திரும்பிய நர்ஸ்கள் கண்ணீர் பேட்டி

இராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கித் தவித்த இந்திய நர்ஸ்கள் 46 பேர் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் ஏர் இந்தியா விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த கேரளத்தைச் சேர்ந்த சாண்ட்ரா செபாஸ்டின் கூறுகையில்: "இராக்கிற்கு திரும்பிச்செல்லும் பேச்சுக்கே இடமில்லை. எங்கள் உயிரை மீண்டும் பணயம் வைக்க நாங்கள் தயாராக இல்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதிதான் இராக் சென்றேன். திக்ரித் அரசு பயிற்சி மருத்துவமனையில் பணியாற்றிய எனக்கு கடந்த 4 மாதங்களாகவே ஊதியம் வழங்கப்படவில்லை.

அந்த மருத்துவமனையில் நாங்கள் 23 பேர் மட்டுமே இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எங்களுடன் மேலும் 15 பேர் சேர்ந்து கொண்டனர்.

திக்ரித் நகர் கிளர்ச்சியாளர்கள் பிடியில் சென்ற பிறகு அந்த மருத்துவமனையில் சிக்கியிருந்த நாட்களில், பலமுறை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் எங்களை வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் இந்திய தூதரகம் அந்த இடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என தெரிவித்திருந்ததால் நாங்கள் வெளியேறவில்லை. ஆனால், 3-ம் தேதி எங்களை சுற்றிவளைத்த கிளர்ச்சியாளர்கள் 15 நிமிடத்தில் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என நிர்பந்தப்படுத்தினர். நீங்கள் அனைவரும் எங்கள் சகோதரிகள். உங்களை நாங்கள் தாக்க மாட்டோம் என்றனர். ஆனாலும் எங்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை பிறக்கவில்லை. கட்டாயப்படுத்தி 4 பேருந்துகளில் நாங்கள் ஏற்றப்பட்டோம். திக்ரித்தில் இருந்து மோசுல் நகர் செல்ல 7 மணி நேரம் ஆனது. இனி ஒருபோதும் இராக்கிற்கு திரும்பிச் செல்ல மாட்டோம் என்றார்.

இராக்கில் இருந்து திரும்பிய நர்ஸ்கள் பலரும் இதையே தெரிவித்தனர். இராக்கில் நிலைமை சீரடைந்தாலும் அங்கு செல்லும் எண்ணம் இல்லை என்றனர்.

எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறுகையில்: என் மகள் ரேணு கடந்த ஆகஸ்டில் தான் இராக் சென்றாள். அவளை அங்கு அனுப்பி வைக்க 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றேன். ஆனால் கடந்த 3 மாதங்களாக அவளால் பணம் அனுப்ப முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

கோட்டயத்தைச் சேர்ந்த மெரீனா 11 மாதங்களுக்கு பின்னர் தன் மகள் ரியாவையும், மகன் மெரினையும் கட்டித் தழுவினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை என தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை:

கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை. அவர்கள் நோன்பு இருந்த போதுகூட எங்களுக்கு உணவு அளித்தனர். அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த நர்ஸ் மெரீனா ஜோஸ் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், உயிருடன் மீண்டு வருவோம் என நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. எங்களை பத்திரமாக மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக மத்திய, மாநில அரசுகள், அதிகாரிகள், ஊடகத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்தியா திரும்பியுள்ள 46 நர்ஸ்களில் 45 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x