

புதுடெல்லி: உரிமம் இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு, கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
எனினும், பல நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் ஆன்லைன் மருந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்த ஆன்லைன் மருந்தகங்கள், “நாங்கள் மருந்துகளை விற்பனை செய்யவில்லை. விநியோகம்தான் செய்கிறோம். ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரி செய்வதற்கு உணவகத்திடமிருந்து உரிமம் பெறுவதில்லை. அதேபோல், மருந்துகளை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யவும் உரிமம் தேவையில்லை” என்று தெரிவித்தன.
இந்நிலையில், உரிமம் இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க 6 வாரம் அவகாசம் வழங்கிய நீதிமன்றம் விசாரணையை வரும் நவம்பர் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.