

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ சுவரொட்டிகளை நேற்று திருமலையில் உள்ள கோயில் முன்பு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வெளியிட்டு பேசியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன.
செப்.18 முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்.15 முதல் 23-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது. இதனையொட்டி, வரும் செப்டம்பர் மாதம் பிரம்மோற்சவத்தின் முதல் நாள், ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கை வழங்குகிறார். சாமானியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இவ்விரு பிரம்மோற்சவங்களுக்கும் விஐபி தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது. அதேபோல், வாகன சேவை, அன்னதானம், லட்டு விநியோகம் உள்ளிட்ட அனைத்திலும் சாதாரண பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு கருணாகர் ரெட்டி கூறினார்.
உடன் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர், கிருஷ்ண சேஷாசல தீட்சிதர், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி உள்ளிட்டோர் இருந்தனர்.
மேலும் ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு: திருப்பதி அலிபிரி வழியாக மலைப்பாதையில் தனது பெற்றோர், உறவினர்களுடன் கடந்த 11-ம் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்த நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா (6) என்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று அடித்துக் கொன்றது.
சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், ‘‘ஏற்கெனவே அச்சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.15 லட்சம் வரை வனத்துறை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் நிதி உதவி செய்திருந்தாலும், கூடுதலாக ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தேவஸ்தானம் பரிசீலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.