

புதுடெல்லி: நாட்டில் உள்ள 1,382 சிறைகளில் நிலை மோசமாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறைகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம் குறித்து பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அமித்தவா ராய் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ராஜேஷ் பிந்தால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அமித்தவா ராய் தலைமையிலான குழு அறிக்கையின் இறுதிச் சுருக்கம் கடந்த ஆண்டு டிசம்பரில் தாக்கல்செய்யப்பட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, அறிக்கைகளின் நகல்களை மத்திய, மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ அமைக்கப்பட்ட பிரதிநிதி கவுரவ் அகர்வாலிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சிறைகளில் கைதிகளுக்கு தரப்பட்டுள்ள மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள், சிறைகளில் உள்ள வசதிகள், அங்கு அவர்களுக்கு கற்றுத்தரப்படும் தொழிற்பயிற்சிகள், சிறையிலிருந்தே கைதிகளை காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வசதிகள், கைதிகளின் குடும்பஉறுப்பினர்கள் அவர்களை சிறையில் பார்ப்பதற்கான வசதி போன்ற விவரங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அப்போது உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கை செப்.26-ம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.