

இரவ நேரங்களில் கிளப்புகளுக்கு வரும் இளம் பெண்கள் குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு வருவது கோவா கலாச்சாரத்திற்கு மிகவும் ஆபத்தானது என கோவா பொதுப்பணித் துறை அமைச்சர் தவாலிக்கர் தெரிவித்துள்ளார்.
கோவாவில் கிளப்புகளுக்கு வரும் பெண்கள் குட்டைப் பாவாடை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். மேலும் அவர், இது போன்ற கலாச்சார சீர்கேடுகள் தொடர்பான ஸ்ரீராம் சேனையின் கருத்துகளில் தவறு எதுவும் இல்லை என்றும் கூறி உள்ளார்.
பனாஜியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கோவா பொதுப்பணித் துறை அமைச்சர் கூறுகையில், "இளம் பெண்கள் இரவுகளில் கிளப்புகளுக்கு குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு வருவது கோவா கலாச்சாரத்திற்கு மிகவும் ஆபத்தானது. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்" என்றார்.
அப்போது வளாகத்தில் நின்று கொண்டிருந்த இளம் பெண் குட்டைப் பாவாடை அணிந்து இருப்பதை அவர் குறிப்பிட்டு, "இது போல நம் பிள்ளைகள் ஆபத்துக்குரியவர்களாக மாற நாம் அனுமதிக்க கூடாது. இந்த விஷயத்தில் ஸ்ரீ ராம் சேனையின் கொள்கைகள் நன்மை தரக்கூடியவயாகவே இருக்கின்றன. அவர்கள் எந்த மதத்திற்கும் வகுப்பிற்கு எதிராக பேசவில்லை.
இந்த நாட்டில் நன்மை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு அரசு தடை விதிக்காது. ஸ்ரீராம் சேனை என்பது ஆரம்ப கால சிவ சேனை போலவே நான் காண்கிறேன். சிவ சேனை நம் கலாச்சாரத்தை கெடுக்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
அது போல தான் இந்த புதிய அமைப்பும் நமது கலாச்சராத்திற்காக பாடுபடுகின்றது" என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஸ்ரீராம் சேனைக்கு ஆதரவாக பேசினார்.
ஸ்ரீராம் சேனை, கடந்த 2009- ம் ஆண்டு மங்களூருவில் கிளப்புகளில் இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தி, தலைமுடியை பிடித்து இழுத்து சாலையில் தள்ளி, க்ளப்புகளுக்கு பெண்கள் செலவதனை எதிர்த்தது.
தற்போது இந்த அமைப்பு மகாராஷ்ட்ராவில் தன்னார்வு அமைப்பாக சேவை நடத்த அனுமதி கோரியுள்ளது. இந்த நிலையில் கோவா பொதுப்பணித் துறை அமைச்சர் ஸ்ரீராம் சேனைக்கு ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.