

பணத்துக்கு ஆசைப்பட்டு நண்பர்களின் உதவியுடன் தனது காதலியின் வீட்டிலேயே திருடிய காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ருத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முஜீப் (22), இவரது நண்பர்கள் சிவா (22), நரேஷ் (23) மூவரும் பொறியியல் பட்டதாரிகள். நல்ல வேலைக்காக முயற்சித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முஜீப்புக்கு ஓர் இளம் பெண்ணிடமிருந்து ‘மிஸ்டு கால்’ வந்துள்ளது. பின்னர் அந்த பெண் தன்னுடன் படித்தவர் என தெரிய வந்ததால் நட்பாக பழகினர். இவர்களது நட்பு காதலாக மாறியது.
இந்நிலையில், கடந்த வாரம் வீட்டில் யாரும் இல்லாததால், தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்ததின் பேரில் முஜீப் அவரது காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, மதம் காரணமாக, இரு வீட்டாரும் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆதலால் என்ன செய்வது என முஜீப் தனது காதலியிடம் கேட்டுள்ளார். இதற்கு, அந்தப் பெண், தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து காட்டியுள்ளார். அதில் ஏராளமான தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் போன்றவை இருந்துள்ளன. இவைகளை நான் கொண்டு வருகிறேன், இதை விற்றுவிட்டு வேலை கிடைக்கும் வரை வாழ்க்கை நடத்தலாம் என காதலி கூறி உள்ளார்.
இது குறித்து, முஜீப் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கு, காதலியிடம் உள்ள நகை, பணத்தை திருடி உல்லாசமாக வாழலாம் என திட்டம் தீட்டினர். இந்நிலையில், காதலி வீட்டார் கடந்த 7-ம் தேதி குடும்பத்துடன் வெளி ஊருக்கு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அன்று மதியம் சுமார் 3 மணியளவில், முஜீப் தனது நண்பர்களுடன் சென்று காதலி வீட்டுக்குள் புகுந்து, ரூ.1 லட்சம் ரொக்கம், 80 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றார்.
இதுகுறித்து, சிலகலகூடா போலீஸாருக்கு புகார் செய்ததின் பேரில், விசாரனை நடைபெற்றது. அதன் அடிப்படையில் அந்தப் பெண்ணின் காதலன் முஜீப், அவரது நண்பர்கள் சிவா, நரேஷ் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்த நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.