Published : 12 Dec 2017 05:59 PM
Last Updated : 12 Dec 2017 05:59 PM

எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சரத் யாதவ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சரத் யாதவ், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி, கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்தது. இதற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அன்வர் அலி எம்.பி. உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் அதிருப்தி அணியாக சரத் யாதவ் செயல்படத் தொடங்கினார்.

இதையடுத்து அவர்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே நிதிஷ் குமார் தலைமையிலான அணியை, ஐக்கிய ஜனதா தள கட்சியாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகிய இருவரையும் மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சரத் யாதவ், இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ''மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் முன்பு, என் தரப்பு வாதத்தை கேட்கவில்லை. எம்.பி. பதவியில் தொடர எனக்கு உரிமை உள்ள நிலையில் எனது கருத்துக்களை கேட்காமல் ஒருதலைபட்சமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே எம்.பி. பதவியில் இருந்து நீக்கியதை செல்லாது என அறிவிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x