Published : 30 Aug 2023 07:11 PM
Last Updated : 30 Aug 2023 07:11 PM
புதுடெல்லி: 2023-ம் ஆண்டுக்கான நிலையான வரைபடத்தை வெளியிட்டுள்ளதை நியாயப்படுத்தியுள்ள சீனா, “இது வழக்கமான நடைமுறைதான்; இந்தியா மிகையாக அர்த்தப்படுத்த வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.
புதிய வரைபடம் தொடர்பான இந்தியாவின் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வான் வென்பின், “இயற்கை வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைபடம் ஒரு வழக்கமான நடைமுறைதான். சட்டத்தின்படி இறையாண்மையை நடைமுறைப்படுத்துவது சீனாவில் வழக்கான நடவடிக்கையில் ஒன்று. சம்பந்தப்பட்ட இரு தரப்பும் குறிகோள்களுக்காக அமைதியாக இருக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதுகுறித்து மிகையாக அர்த்தப்படுத்தி கருத்துக் கூற வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
சர்ச்சையின் பின்னணி: சீனாவின் இயற்கை வளத் துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடியது. இதை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான தேசிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் அருணாச்சல பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என பெயரிட்டும், கடந்த 1962-ம் ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக் ஷய் சின் என்றும் சீனா கூறியுள்ளது. இதேபோல் தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும், தனது பகுதியாக புதிய வரைபடத்தில் சீனா தெரிவித்துள்ளது. தெற்கு சீன கடலின் பெரும் பகுதியை தனது பகுதியாக சீனா உரிமை கொண்டாடியுள்ளது. இந்த தெற்கு சீன கடல் பகுதியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.
புதிய வரைபடம் குறித்து சீன இயற்கை வளங்கள் துறை அமைச்சகத்தின் திட்டமிடல் துறை தலைவர் வூ வென்சாங் கூறும்போது, “நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் வரைபடம் புவியியல் அமைப்பு தகவல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை வளங்கள் மேலாண்மை, சூழலியல் மற்றும் நாகரிகங்களை உருவாக்கவும் இது உதவுகிறது” என்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு, சர்வதேச விதிமுறைகளை மீறி, அடுத்த நாடுகளின் எல்லைகளை உரிமைகொண்டாடுவதில் மிக மோசமான வியூகங்களை பயன்படுத்துகிறது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “இது சீனாவின் பழைய பழக்கம். நமது பகுதிகள் என்ன என்பதில் இந்த அரசு மிக தெளிவாக உள்ளது. அபத்தமாக உரிமை கோருவதன் மூலம், அடுத்த நாட்டின் பகுதிகள் சீனாவுடையது ஆகாது” என்றார்.
இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, “சீனா இதுபோல் கூறுவது முதல் முறையல்ல. இதுபோன்ற முயற்சிகளுக்கு, இந்தியா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. புதிதாக பெயர் வைப்பதால், உண்மை நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது” என்றார்.
முன்னதாக, தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பிரமதர் மோடி பேசினார். அப்போது இந்தியா - சீனா எல்லை பகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் கவலையளிப்பதாக தெரிவித்தார். இந்தியா-சீனா உறவு இயல்பு நிலைக்கு திரும்ப எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம் என பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் க்வத்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT