வேலைவாய்ப்பு திருவிழா மூலம் நாடு முழுவதும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: பிரதமர் மோடி வழங்கினார்

வேலைவாய்ப்பு திருவிழா மூலம் நாடு முழுவதும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: பிரதமர் மோடி வழங்கினார்
Updated on
2 min read

நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புமாறு, உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதன்படி, ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க வகை செய்யும் வேலை வாய்ப்பு திருவிழாவை (ரோஜ்கார் மேளா) பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். இதன்படி மாதந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு அவர் பணி நியமன ஆணைகளை காணொலி மூலம் வழங்கி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சார்பில் 45 நகரங்களில் வேலை வாய்ப்பு திருவிழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஆயுதப்படைப் பிரிவு (சிஎபிஎப்) பணிக்கு தேர்வான 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இவர்கள் சிஆர்பிஎப், பிஎஸ்எப், சஷாஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி), அசாம் ரைபிள்ஸ், சிஐஎஸ்எப், ஐடிபிபி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் டெல்லி போலீஸ் உள்ளிட்டவற்றில் காவலர் (ஜெனரல் டூட்டி), உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியில் சேர உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசியதாவது:

இளைஞர்கள் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். அந்த வகையில் இன்று பணி நியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இவர்கள் நாட்டுக்காக பணியாற்றுவதுடன் நாட்டு மக்களின் பாதுகாவலர்களாகவும் செயல்படுவார்கள்.

இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவப் படைக்கான ஆட்கள் தேர்வு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது முதல் இறுதித் தேர்வு வரையிலான பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. இதற்கான தேர்வுகள் முன்பு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்ற நிலையில் இப்போது 13 உள்ளூர் மொழிகளில் நடத்தப் படுகின்றன.

எல்லைப் பகுதி மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சத்தீஸ்கரில் நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக் கானவர்கள் இன்று பணி ஆணை களை பெற்றுள்ளனர்.

உத்தரபிரதேசம் ஒரு காலத்தில் குற்றச் செயல்களுக்கு பெயர் பெற்று விளங்கியது. ஆனால் அங்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட பிறகு இன்று முதலீட்டுக்கு பெயர் பெற்று விளங்குகிறது.

அடுத்த சில ஆண்டுகளில் உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறும்.
மருந்து உற்பத்தித் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் வரும் காலங்களில் ஏராளமான வேலைவாய்ப்பு உருவாகும். வாகன உற்பத்தித் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த இரு துறைகளும் வரும் காலத்தில் மேலும் வளரும்.

வரும் 2030-க்குள் இந்திய பொருளாதாரத்தில் சுற்றுலா துறையின் பங்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இத்துறை இளைஞர்களுக்கு 13 கோடி முதல் 14 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ‘மேக் இன் இந்தியா' உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்பும் கணிசமாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in