உ.பி. முதல்வரின் காலைத் தொட்டு ரஜினி வணங்கிய விவகாரம்: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலைத் தொட்டு நடிகர் ரஜினி காந்த் வணங்கியது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது லக்னோ போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகர் ரஜினி காந்த் தனது ‘ஜெயிலர்’ படம் வெளியான பிறகு இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றார். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் சென்ற அவர் அங்கிருந்து கடந்த 18-ம் தேதி உ.பி. வந்து, 4 நாட்கள் தங்கினார். அப்போது லக்னோவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கச் சென்ற ரஜினி அவரது கால்களைத் தொட்டு வணங்கினார்.

இது தொடர்பாக தமிழகம் உள்பட நாடு முழுவதிலும் சர்ச்சைகள் கிளம்பின. ஏனெனில், 72 வயதான ரஜினி, தன்னை விட குறைந்த, 51 வயதுடைய முதல்வர் யோகியின் கால்களைத் தொட்டு வணங்கியது இதற்கு காரணமாயிற்று. இப்பயணத்தில் நடிகர் ரஜினி, முதன்முறையாக அயோத்திக்கும் சென்று ராமர் கோயிலில் தரிசனம் செய்திருந்தார்.

இந்நிலையில் முதல்வர் யோகியின் காலைத் தொட்டு நடிகர் ரஜினி காந்த் வணங்கியது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதை குறிப்பிட்டு லக்னோவின் சமூகசேவகரான பிர்ஜேந்தர் வாஜ்பாய் என்பவர், நகரின் ஹசரத்கன்ச் காவல் நிலையத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அளிக்கப்பட்ட இப்புகாரை ஏற்ற போலீஸார், அதன் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த அவதூறு பதிவுகள், பியூஷ் மானூஸ் என்பவரால்பதிவேற்றப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் மீது நடவடிக்கை எடுக்க லக்னோ போலீஸார் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து பதிவேற்றம்: இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரம்கூறுகையில், “இந்தப் பதிவுகள்தமிழகத்திலிருந்து பதிவேற்றமாகி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மீது முதல்வர் யோகியிடம் அனுமதி பெற்ற பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்படும். புகார்தாரர் அளிக்கும் நெருக்கடியை பொறுத்தும் கைது நடவடிக்கைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.

ரஜினி தனது பயணம் முடித்து சென்னை திரும்பிய பிறகு முதல்வர் யோகியின் காலைத் தொட்டு வணங்கியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ரஜினி, “அவர் ஒரு துறவி என்பதால் அவரை மதித்துகால்களைத் தொட்டு வணங்கினேன்” என்று கூறினார் என்பது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in