

பாலியல் வழக்கில் கைதான 'தெஹல்கா' முன்னாள் நிறுவனர் ஆசிரியர் தருண் தேஜ்பாலை ஜாமீனில் விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தருண் தேஜ்பால் வழக்கு விசாரணையை இன்று முதல் இன்னும் 8 மாத காலத்திற்குள் முடிக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், கோவா மாநிலம் பனாஜியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தெஹல்கா சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஹோட்டல் லிப்ட்டில், தேஜ்பால் தன்னை பலாத்காரம் செய்ததாக அவருக்கு கீழ் பணியாற்றிய பெண் நிருபர் புகார் அளித்தார்.
தேஜ்பாலின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கோவா போலீஸாரால் கடந்த நவம்பர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது தாய் கடந்த மே 18-ம் தேதி மரணமடைந்ததால் அவருக்கு உச்ச நீதிமன்றம் மூன்று வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் கிடைத்தும் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாததால், இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வசதியாக ஜூன் 27-ம் தேதி வரை தருண் தேஜ்பால் இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு இன்று சாதாரண ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு கடுமையான நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. நிபந்தனைகளை கடைபிடிக்க தவறினால் மீண்டும் கைது செய்யப்படுவார் எனவும் எச்சரித்துள்ளது.