Last Updated : 02 Dec, 2017 09:28 AM

 

Published : 02 Dec 2017 09:28 AM
Last Updated : 02 Dec 2017 09:28 AM

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் ‘பத்மாவதி’ எதிர்ப்பை ஆதரிக்காத அத்வானி

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு பாஜக மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, மூத்த உறுப்பினர் எல்.கே.அத்வானி அமைதி காத்துள்ளார்.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ திரைப்படத்தில் வரலாற்று உண்மை திரிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜபுத்திர சமூகத்தினருடன் இந்துத்துவா அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இப்படத்தை வெளியிட ராஜஸ்தான், ம.பி., பிஹார் மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

இந்நிலையில், ‘திரைப்படத் துறையின் பிரச்சினைகளும், சவால்களும்’ என்ற தலைப்பில் விவாதித்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், பத்மாவதி படம் குறித்து பாஜகவின் இரு உறுப்பினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து பன்சாலி மற்றும் தேசிய திரைப்பட தணிக்கை வாரியத்தினரை (சிபிஎப்சி) நேற்று முன்தினம் நிலைக்குழு அழைத்து விளக்கம் கேட்டது. இந்த நிலைக்குழுவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த 30 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

பாஜகவின் இளம் எம்.பி. அனுராக் தாக்கூர் இதன் தலைவராக உள்ளார். இக்குழுக் கூட்டத்தில் பன்சாலியிடம் பாஜக மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் காரசாரமான கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நிலைக்குழு உறுப்பினர்கள் கூறும்போது, “பத்மாவதி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை சிபிஎப்சி பார்த்து முடிவு செய்யட்டும். இப்படத்தை இந்தியாவில் திரையிடுவதா, வேண்டாமா என முடிவு எடுக்கும் உரிமை தணிக்கை குழுவுக்கு மட்டுமே உள்ளது என அத்வானி கூறினார். பன்சாலியிடம் கேட்கப்பட்ட இந்துத்துவா ஆதரவு கேள்விகளால் சங்கடப்பட்ட அத்வானி, திரைப்படத்துக்கு தொடர்பில்லாதவற்றை இங்கு கேட்பதில் பலனில்லை என கருத்து தெரிவித்தார்” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “இந்துத்துவா கொள்கைகளை அதிகம் முன்னிறுத்தி பேசுவதே அத்வானிஜியின் வழக்கம். ஆனால் நிலைக்குழு கூட்டத்தில் ‘பத்மா வதி’க்கு எதிர்ப்பு தெரிவிக்காதது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் மக்களவை நடவடிக்கைகள் மீது அதிருப்தி அடைந்து, ‘ராஜினாமா செய்து விடலாம் போல் உள்ளது’ என அத்வானி கூறியது பாஜகவை கவலை அடைய செய்தது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x