

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இரண்டாம் நாளாக புதன்கிழமை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு டெல்லி தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, சாட்சியாகவும் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை அவர் முதல் நாளாக ஆஜரானபோது, “பிரதமர், சட்டத்துறை, வெளியுற வுத்துறை அமைச்சர்களின் ஆலோ சனைப்படியே ஒதுக்கீடு வழங்கப் பட்டது” என்றார்.
இந்நிலையில் இரண்டாம் நாளாக புதனன்றும் நீதிபதி ஓ.பி.சைனி முன் அவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, “எந்த முடிவையும் நான் தனிப்பட்ட முறையில் எடுக்கவில்லை. மூத்த அமைச்சர்களின் ஆலோசனைப் படியே எடுத்தேன். கிராமங்களுக்கும் தொலைத்தொடர்பு வசதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த எண்ணம் நிறைவேறி உள்ளது. நான் எடுத்த முடிவால்தான் இப்போது கிராமங்களுக்கும் தொலைபேசி வசதி கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.