2007 முதல் 2017 வரை.. 2ஜி வழக்கு கடந்து வந்த பாதை

2007 முதல் 2017 வரை.. 2ஜி வழக்கு கடந்து வந்த பாதை
Updated on
2 min read

முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு இன்று (டிச.21) வெளியாகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 2 வழக்குகளை தொடுத்தது.

இந்த வழக்கு மீதான இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதால், அவற்றை பரிசீலிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும், தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பாகவும் பரிசீலிக்க கூடுதல் காலம் தேவைப்படுவதாகவும் கடந்த 5ம் தேதி  விசாரணையின் போது நீதிபதி ஓ.பி. சைனி கூறினார்.

இந்நிலையில் 2 வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

* 2007 மே மாதம் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ. ராசா பொறுப்பேற்றார்.

* 2009 மே 4ம் தேதி 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது

* 2009ம் ஆண்டு  2 ஜி  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறி  சிபிஐ விசாரிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்தது.

* 2009 அக்டோரில் தொலைத்தொடர்பு அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

* 2010ம் ஆண்டு மே மாதம் நீரா ராடியாவுடன் அமைச்சர் ஆ. ராசா தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியானது.

* 2010ம் ஆண்டு நவம்பரில் - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக  மத்திய கணக்குத் தணிக்கை குழு தெரிவித்தது.

* அதே ஆண்டு நவம்பரில் மத்திய  தொலைத் தொடர்பு  துறை அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா ராஜினாமா செய்தார்.

* டிசம்பர் 2010 - நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல்கள் அடங்கிய டேப்புகள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு.

* 2011ல்  ஆ.ராசா கைது செய்யப்பட்டார்.

* 2011ம் ஆண்டு மார்ச்சில் - 2 ஜி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 2011ம் ஆண்டு ஏப்ரலில் ஆ. ராசா உள்ளிட்டோர் மீது முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேஆண்டு திமுக எம்.பி கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

* 2011 மே மாதம்  கனிமொழி கைது செய்யப்பட்டார்

* 2011 நவம்பரில்  டெல்லி உயர் நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமின் வழங்கியது.

* 2012ம் ஆண்டு ஆ. ராசா அமைச்சராக இருந்தாது ஒதுக்கிய 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

* 2015ல்  குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய கோரும் கனிமொழியின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

* 2017 ஏப்ரலில்  சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த 2ஜி வழக்கின் விவாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

* 2017 நவம்பர் 5ல் 2ஜி வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது.

* 2017 டிசம்பர் 21 (இன்று) தீர்ப்பு வெளியாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in