Published : 06 Dec 2017 10:03 AM
Last Updated : 06 Dec 2017 10:03 AM

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு - புதிய கருத்து கணிப்பில் தகவல்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவினாலும், பாஜக 91 முதல் 99 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், லோக்நிதி-சிஎஸ்டிஎஸ்-ஏபிபி நியூஸ் ஆகியவை இணைந்து சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தின. அதன் முடிவு வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

குஜராத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 43 சதவீத வாக்குக் கிடைக்கும். எனினும், மொத்தம் உள்ள 182-ல் பாஜகவுக்கு 91 முதல் 99 தொகுதிகளும் காங்கிரஸுக்கு 78 முதல் 86 இடங்களும் கிடைக்கும்.

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் ஜிஎஸ்டி வரி விகிதம் பெரிய அளவில் குறைக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் திருப்தி அடையவில்லை என்பதை உணர முடிகிறது. மேலும் மாநில அரசு மீதான விவசாயிகளின் அதிருப்தியும் காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு காரணமாக விளங்குகிறது.

வடக்கு மற்றும் தெற்கு குஜராத்தில் காங்கிரஸுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் சவுராஷ்டிரா மற்றும் மத்திய குஜராத்தில் பாஜக தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுபோல, நகர்ப்புறங்களில் பாஜகவுக்கும் கிராமப்புறங்களில் காங்கிரஸுக்கும் செல்வாக்கு அதிக அளவில் காணப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே அமைப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்தின. அதில், பாஜக 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸுக்கு வெறும் 30 தொகுதிகளே கிடைக்கும் என்றும் தெரியவந்தது. அக்டோபரில் நடத்திய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 113 முதல் 121 தொகுதிகளும் காங்கிரஸுக்கு 58 முதல் 64 தொகுதிகளும் கிடைக்கும் என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 115, காங்கிரஸ் 61 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன. எனினும், பதவி விலகல் காரணமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இப்போது 43 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x